

பணமதிப்பு நீக்க நடவடிக்கை, வறட்சி மற்றும் வார்தா புயல் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு மாம்பழம் மற்றும் சாத்துக் குடி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கோடை காலம் தொடங்கியதும் கூடவே மாம்பழ சீசனும் தொடங்கி விடும். மார்ச் மாதம் தொடங்கும் மாம்பழ சீசன் ஜூலை மாதம் வரை நீடிக்கும். இந்த சீசனில் மாம்பழம் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மாம்பழ விற்பனை குறைந்துள்ளதாக பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை பழ கமிஷன் முகவர்கள் சங்கத் தலை வர் எஸ்.சீனிவாசன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மாம்பழ சீசன் மார்ச் மாதத் திலேயே தொடங்கினாலும் மே மாதம்தான் அவற்றின் வரத்து அதிக மாக இருக்கும். பங்கனப்பள்ளி, செந்தூரா, இமாம்பசந்த், நீலம், ருமானி, மல்கோவா, கோவா பீட்டர் என சுமார் 250 ரகங்களுக்கும் மேல் உள்ளன. மாம்பழங்கள் ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும், தென் மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் விளைவிக்கப்பட்டு தருவிக்கப்படுகின்றன.
ஆனால், கடந்த ஆண்டு இறுதி யில் வீசிய வார்தா புயலால் ஏராளமான மா மரங்கள் சேதம் அடைந்தன. மேலும், இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. அத்துடன், மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பணப்புழக்கம் குறைந்ததாலும் இந்த ஆண்டு மாம்பழ விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
50 சதவீதம் விற்பனை குறைவு
தற்போது நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டன் வரை மாம்பழம் விற்பனை ஆகிறது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 30 சதவீதம் குறைவாகும். அதேபோல், சாத்துக்குடி விற்பனையும் பாதிப் படைந்துள்ளது. இதன் விற்பனை யும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 50 சதவீதம் குறைந்துள்ளது.
இவ்வாறு சீனிவாசன் கூறினார்.
இதுகுறித்து, கோயம்பேட்டில் பழ வியாபாரம் செய்துவரும் டேனியல் கூறும்போது, ‘‘சீசன் சமயத்தில் நாள் ஒன்றுக்கு 4 டன் எடை கொண்ட 10 முதல் 20 லோடு மாம்பழம் தினமும் விற்பனைக்கு வரும். ஆனால், இந்த ஆண்டு வறட்சி மற்றும் வரத்து குறைவு காரணமாக 5 முதல் 10 லோடு மாம்பழம் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
மேலும், மாம்பழம் கல் வைத்து பழுக்க வைக்கப்படு கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுவதாலும் அவற் றின் விற்பனை குறைந்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டு திராட்சை, மாதுளம்பழம் மற்றும் ஆரஞ்சுப் பழம் வரத்து அதிகளவில் உள்ளதால் அவற்றின் விலையும் குறைந்துள்ளது. இதனால், பொது மக்கள் மாம்பழத்துக்குப் பதிலாக இவற்றை அதிகளவில் விரும்பி வாங்குகின்றனர்’’ என்றார்.