

ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ ஆகிய அதிவேக ரயில்களில் 50 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ ஆகிய அதிவேக ரயில்களில் நாளை முதல் புதிய கட்டண முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ. 500 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். இந்தக் கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது.
புதிய கட்டண முறைப்படி ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ ரயில்களில் முதல் 10 சதவீத படுக்கைகளுக்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். அதன்பிறகு ஒவ்வொரு 10 சதவீத படுக்கைகளுக்கும் 10 சதவீதம் வீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
அதாவது 20 சதவீத படுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் ஒருவர் முன்பதிவு செய்தால் அவர் 20 சதவீத கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். 50 சதவீதத்துக்கும் மேல் படுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். குளிர்சாதன வசதியுடன் கூடிய 3-ம் வகுப்பு, 2-ம் வகுப்பு ஆகியவற்றுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். முதல் வகுப்பு, எக்சிகியூட்டிவ் வகுப்புக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது.
ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ ரயில்கள் உயர் வகுப்பினருக்கானது என்ற காலம் மாறிவிட்டது. இப்போது நடுத்தர வகுப்பினரும் இத்தகைய ரயில்களில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். முதல் வகுப்பு, எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கு கட்டணங்களை உயர்த்தாமல் 3-ம் வகுப்பு, 2-ம் வகுப்புகளுக்கு மட்டும் உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது நடுத்தர மக்களை கடுமையாகப் பாதிக்கும்.
புதிய கட்டண முறை அமலுக்கு வந்தால் விமானக் கட்டணங்களை விட ரயில் கட்டணம் அதிகமாக இருக்கும். சென்னை - மதுரைக்கு துராந்தோ ரயிலில் செல்ல குளிர்சாதன 2-ம் வகுப்பு கட்டணம் ரூ. 1,445 ஆகும். 50 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்ட பிறகு இந்த ரயிலில் 2-ம் வகுப்புக்கு ரூ. 2 ஆயிரத்து 210 வசூலிக்கப்படும். அதேநேரத்தில் சென்னை - மதுரைக்கு விமானங்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 1,803 மட்டுமே. ரயில்களில் பயணிக்கும் நடுத்தர வகுப்பு மக்களை விமானங்களை நோக்கி திருப்புவதற்கே இது வழிவகுக்கும்.
பெரும்பாலான நேரங்களில் ரயில் படுக்கைகள் சில நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. அத்தகைய சூழலில் காலை 10 மணிக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு கட்டணமும், காலை 10.05 மணிக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் கட்டணமும் வசூலிப்பது நியாயமான செயலாக இருக்காது.
ரயில்களை தூய்மையாகவும், சரியான நேரத்துக்கும் இயக்க நடவடிக்கை எடுக்காமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது ரயில்வே துறை மீது மக்களுக்கு வெறுப்பையும், கோபத்தையும் மட்டுமே ஏற்படுத்தும். எனவே, அதிவேக ரயில்களுக்கான கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.