Published : 15 Oct 2013 10:08 AM
Last Updated : 15 Oct 2013 10:08 AM

நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் ஆ. ராசா போட்டி?

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் அ.ராசா போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை தங்கள் மாவட்டத்துக்கு அழைத்து வருவதில் எப்போதுமே போட்டிப்போடுவது விழுப்புரம் பொன்முடியும், திருவண்ணாமலை எ.வ,வேலுவும்தான். செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலையில் நடக்ககவுள்ள முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச உள்ளார். ஆனால், கடந்த 12-ம் தேதி விழுப்புரத்தில் நடந்த முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அ.ராசா சிறப்புரையாற்றினார்.

ஸ்டாலின் விழுப்புரமோ, திருவண்ணாமலையோ வந்தால் பக்கத்து மாவட்டத்துக்கு வராமல் இருந்தது இல்லை. இந்த முறை திருவண்ணாமலைக்கு மட்டுமே வருகிறார். விழுப்புரத்துக்கு வந்த அ.ராசாவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தி.மு.க-வினரை வியப்பில் ஆழ்த்தியது. எந்த இடத்திலும் பொன்முடியின் படம் உள்ள விளம்பரம் வைக்கப்படவே இல்லை. தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் வந்த வரவேற்பு விளம்பரத்திலும்கூட பொன்முடியின் படம் இடம்பெறவில்லை. அ.ராசாவே முன்னிலை படுத்தப்பட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க. கூட்டணியில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டது. இதில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் மட்டுமே வெற்றிபெற்றார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியை தி.மு.க. தனக்கு ஒதுக்கிக்கொண்டு, அங்கு அ.ராசாவை களமிறக்க முடிவெடுத்திருப்பதாக விழுப்புரம் தி,மு,க-வினர் பேசிவருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோற்றுப்போன பொன்முடி, இழந்த தன்னுடைய செல்வாக்கை, மீட்க அ.ராசாவைக் களமிறக்க தி.மு.க. தலைமையிடம் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பேசிய அ.ராசா, ’’பொன்முடி தனக்குப் பாடம் நடத்தி்ய பேராசிரியர் எனவும், விழுப்புரம் இவ்வளவு வளர்ச்சிப் பெற்றுள்ளதை ’பொன்முடிக்கு முன், பொன்முடிக்கு பின்’ எனப் பகுத்தாய்ந்து பார்த்தால், யார் ஆட்சியில் விழுப்புரம் வளர்ந்துள்ளது எனப் புரிந்துகொள்ளலாம்” என்று ஆ.ராசா பொன்முடிப் புகழ் பாடியதை ஒப்பிட்டு பார்த்தால், விழுப்புரம் தொகுதியில் அ.ராசா போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x