Last Updated : 30 Jun, 2017 11:59 AM

 

Published : 30 Jun 2017 11:59 AM
Last Updated : 30 Jun 2017 11:59 AM

புதிய தடுப்பணைகளை மூழ்கடித்து மழை வெள்ளம் சென்றும் திருப்தி அடையாத அட்டப்பாடி விவசாயிகள்

சமீபத்தில் பெய்த மழையால் கேரள மாநிலம் அட்டப்பாடியின் தேக்குவட்டை, மஞ்சிக்கண்டி தேக்குவட்டை கிராமங்களில் கட்டப்பட்ட புதிய தடுப்பணையை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது.

‘இது தற்காலிக நிவாரணம்தான். ஒரு மாத காலத்துக்காவது மழை பெய்து வெள்ளம் தொடர்ந்து சென்றால் ஒழிய, கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியை சரிப்படுத்த முடியாது’ என்கின்றனர் இங்குள்ள விவசாயிகள்.

கோவை பில்லூர் அணைக்கு நீலகிரி மலைக்காடுகளில் இருந்து அப்பர் பவானி வாயிலாகவும், கேரள மாநிலம் அட்டப்பாடி வழியாக முள்ளி, அத்திக்கடவு பகுதிகளிலிருந்தும் நீர் வருகிறது. அதில், கேரளத்தில் கடந்த ஜனவரியில் கட்டப்பட்ட 2 தடுப்பணைகளால் விவசாயிகளிடம் கடும் சர்ச்சை நிலவியது. இந்த அணைகளை கட்டினால் கோடை காலத்தில் தமிழகப் பகுதிக்கு தண்ணீரே கிடைக்காது என்று சர்ச்சைகள் கிளம்பி போராட்டங்களும் வெடித்தன.

ஆனால், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி இந்த தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டன. இது சம்பந்தமாக மேலும் 4 அணைகள் கட்டும் திட்டம் கேரள அரசிடம் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அட்டப்பாடி பகுதியில் கடந்த மே 28-ம் தேதியே வரவேண்டிய மழை வரவில்லை. மாறாக 2 வாரங்கள் தாமதித்து சோலைக்காடுகளில் - குறிப்பாக இங்குள்ள அமைதிப்பள்ளத்தாக்கு பகுதியில் நல்ல மழை பெய்து பவானியில் நீர்வரத்து காணப்பட்டது.

அதனால் அட்டப்பாடி பவானியில் சில நாட்கள் நீர் வரத்து அதிகரிப்பதும், பிறகு குறைவதுமாகவே இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக தாவளம், மஞ்சிக்கண்டி, ரங்கநாதபுரம், தேக்குவட்டை, பாலூர், சாவடியூர், அகழி உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு மழை பெய்துள்ளது. அதேபோல் சிறுவாணி சோலைக்காடுகளில் மழை பொழிவு இருந்ததால் பவானியில் வந்துசேரும் சிறுவாணி ஆற்றிலும் தண்ணீர் வரத்து கூடுதலாகியது. எனவே பவானி முள்ளியை அடைந்து தமிழகப் பகுதிக்குள்ளும் பிரவேசித்தது. பில்லூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்றும், நேற்று முன்தினமும் இப்பகுதிகளில் மழை தூறலுடன் நின்றுவிட்டது. நேற்று முன்தினம் வரை இங்கே கட்டப்பட்டுள்ள புதிய அணைகளை மூழ்கடித்து ஓடிய வெள்ளம் சற்றே சரிந்துவிட்டது.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேலுச்சாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறும்போது, ‘2 வருடங்களுக்கு முன்பு பெய்த மழை கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி, இங்கே இல்லை என்பதாலேயே கடும் வறட்சி நிலவியது. அதனாலேயே இங்குள்ளவர்கள் தண்ணீருக்கு தவித்தனர். இந்த ஆண்டும் அப்படி ஆகி விடுமோ என்ற பயம் இன்னமும் இருக்கிறது. இதேபோலத்தான் கடந்த ஆண்டும் சில நாட்கள் மட்டும் மழை பெய்துவிட்டு ஏமாற்றிவிட்டது. இந்த ஆண்டும் அமைதிப்பள்ளத்தாக்கு சோலைக்காடுகளில் பெய்யும் மழையால்தான் தண்ணீர் இந்த அளவுக்கு ஓடுகிறது. இதன் மூலம் சில நாட்களில் புல், செடி கொடிகள் முளைக்கும். கால்நடைகளுக்கு ஒரு மாதத்துக்கு தீவனம் கிடைக்கும். ஆனால் அதுவே நிரந்தரமாகாது. இதே மழை ஒரு மாதமாவது தொடர்ந்து பெய்ய வேண்டும். அதுதான் இப்போது நிலவும் கடும் வறட்சியை போக்கும். ஆனால் 2 நாட்களாக மழை இல்லை. எனவே இப்படி வெள்ளம் பெருக்கெடுப்பது தற்காலிகமாகவே தெரிகிறது, சந்தோஷப்பட ஏதுமில்லை. இருந்தாலும், விதைப்புக்கு தயார் நிலையில் உள்ளோம். இன்னமும் 2 மழை பெய்தால்தான் விதைகளை விதைக்க முடியும்’ என்றனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x