

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடைபெற்றது. இதேபோல, நெடுவாசல் அருகே ஓஎன்ஜிசி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ள நல்லாண்டார்கொல்லையில் மார்ச் 8-ம் தேதி பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நெடுவாசல் கிழக்கு அம்பேத்கர் தெரு பகுதியைச் சேர்ந்த எ.பொன்னம்மாள் (60) மயங்கி விழுந்தார். பின்னர், பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இறந்த பொன்னம்மாளின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பொன்னம்மாளின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து, பொன்னம்மாளின் மகன்கள் சம்பத், சிவாஜி, மகள்கள் சாந்தி, சந்திரா ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை நெடுவாசலில் ஆட்சியர் சு.கணேஷ் நேற்று வழங்கினார்.
அப்போது, ஆட்சியர் கூறும்போது, “இக்குடும்பத்தின் வறுமையை கருத்தில் கொண்டு வாரிசுதாரர்களுக்கு பசுமை வீடுகள் வழங்கப்படும். மேலும், பிற தேவைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.