

இளம் விஞ்ஞானிக்கான தேசிய விருது பெற்ற புதுச்சேரி மாணவர்களையும், அவர்களுக்கு வழிகாட்டியவர்களையும் அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று பாராட்டினார்.
மத்திய அரசு இளம் விஞ்ஞானிகளை கண்டறிய மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் புதுவை அறிவியல் இயக்கம், பள்ளிக்கல்வித் துறையின் மாநில பயிற்சி மையத்துடன் இணைந்து கடந்த 24 ஆண்டுகளாக குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான மாவட்ட மாநாடுகள் புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டன. இதில் 332 க்கும் மேற்பட்ட ஆய்வு திட்டங்கள் மாணவர்களால் சமர்பிக்கப்பட்டன. இதில் தேர்வு செய்யப்பட்ட 30 ஆய்வு திட்டங்கள் கடந்த நவம்பர் 15-ம் தேதி மாநில மாநாட்டில் சமர்பிக்கப்பட்டன.
இதில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த 6 ஆய்வு குழுக்கள் மகராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் பராமதியில் உள்ள வித்தியபாரதி பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 27 முதல் 31 வரை நடைபெற்ற இந்திய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டன. இதில் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர், மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில் 6 மாணவர்களும் 2 வழிகாட்டி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்தியா முழுவதிலிருந்தும் 630 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றில் இருந்து 16 ஆய்வறிக்கைகள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன. புதுவை மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் குளூனி பள்ளி மாணவி காயத்ரி தலைமையிலான மாணவிகள் செய்த ஆய்வு அறிக்கையும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வுக்கு வழிகாட்டி ஆசிரியையாக நித்தியா சகாயராஜ் செயல்பட்டார்.
இவர்கள் பல்வேறு வகையான கீரை வகைகளில் உள்ள இரும்பு சத்தை கமர்கட்டு வடிவில் தயாரித்து உட்கொள்ள செய்வதன் மூலம் வளர் பருவ மாணவ, மாணவிகளின் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யலாம் என்பதை தங்களது ஆய்வு அறிக்கையில் சமர்ப்பித்து இருந்தனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவிக் கும் புதுவை சார்பில் கலந்து கொண்ட 6 ஆய்வு திட்டங்களுக்கும் இளம் விஞ்ஞானிகளுக்கான தேசிய விருதை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் ஆகியோர் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து 104வது இந்திய அறிவியல் மாநாடு ஜனவரி 3 முதல் 7 வரை திருப்பதியில் நடந்தது. இதன் துவக்க விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
இதில் புதுவையில் இருந்து அறிவியல் இயக்க ஆற்றல் பொதுச்செயலாளர் ஹேமாவதி செயலாளர் அருண் தலைமையில் 3 ஆய்வு மாணவர்களும் 3 ஆய்வு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இளம் விஞ் ஞானிக்கான தேசிய விருது பெற்ற ஆய்வு கட்டுரையை சமர்பித்த மாணவர்களையும், அவர்களுக்கு உதவி புரிந்த அறிவியல் இயக்க பொதுச்செயலாளர் ஹேமா வதி மற்றும் வழிகாட்டி ஆசிரி யர்களையும் பாராட்டும் விழா நேற்று சட்டசபை வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு புதுவை மாணவர்களின் வெற்றிக்கு பாடுபட்ட மாநில பயிற்சி மையத்திற்கும், அறிவியல் தொழில்நுட்ப துறையினரையும் சால்வை அணிவித்து பாராட்டினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் விருது பெற்ற மாணவியருக்கு 3,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவியல் இயக்க பொதுச் செயலர் ஹேமாவதி தெரிவித்துள்ளார்.