

துறைவாரியான மானியக் கோரிக் கைகள் மீதான விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், அதிமுக எம்எல்ஏக்கள் பண பேரம் குறித்த விவகாரத்தை கிளப்ப திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், மானியக் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக சட்டப்பேர வையை கூட்ட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து கடந்த மே 25-ம் தேதி நடந்த அமைச் சரவைக் கூட்டத்தில், பேரவைக் கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப் பட்டது. இதற்கிடையே, பேரவைச் செயலாளர் அ.மு.பி. ஜமாலுதீன் ஓய்வு பெற்று, பேரவை பொறுப்பு செயலாளராக கே.பூபதி பொறுப்பேற்றார். அவர், சட்டப்பேரவை கூட்டம் தொடர்பான அறிவிப்பை கடந்த 5-ம் தேதி வெளியிட்டார். அதில், ஜூன் 14-ம் தேதி காலை 10 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில், பேரவைக் கூட்டத்தை ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
முதல் நாளான இன்று, மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கான இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து கேள்வி நேரம், நேரமில்லா நேரம் எடுத்துக்கொள்ளப்படும். பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கும். விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுவார். அப்போது துறைக்கான புதிய அறிவிப்புகளையும் வெளி யிடுகிறார்.
மசோதாக்கள் நிறைவேற்றம்
இந்தக் கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா, ரியல் எஸ்டேட் தொடர் பான விதிமுறைகளுக்கான திருத்தம், தமிழகத்தில் 13 பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர் நியமனத்துக்கான திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அணிகள் இணைப்புக்கு அமைக்கப்பட்ட குழுவை கலைத்துவிட்டதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து விட்டார். இருப்பினும், முதல்வர் கே.பழனிசாமி தரப்பினர் இன்னும் இணைப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், டிடிவி தினகரன் தரப்பினர் இதை விமர்சித்துள்ளனர்.
தற்போதைய சூழலில் ஓபிஎஸ் தரப்பில் 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். தினகரனுக்கு ஆதரவாக 32 பேர் உள்ளனர். மற்றவர்கள் முதல்வர் கே.பழனிசாமிக்கு ஆதர வாக உள்ளனர். ஆட்சிக்கு பாதிப் பில்லை என இவர்கள் தெரி வித்தாலும், சட்டப்பேரவையில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்துதான், எம்எல்ஏக்களின் அடுத்தகட்ட செயல்பாடுகள் இருக்கும்.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு செல்வதை தடுக்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக தனியார் தொலைக்காட்சியில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் இடம்பெற்றுள்ள மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் இதை மறுத்துள்ளார். ஆனால், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சியான திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தையும் பேரவையில் இன்று திமுக எழுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி வறட்சி, விவசாயிகள் பிரச்சினை, குடிநீர் தட்டுப்பாடு, நீட் தேர்வு, இறைச்சிக் காக மாடுகள் விற்பனைக்கு தடை, மாடு வாங்க சென்ற தமிழக அதிகாரிகள் ராஜஸ்தானில் தாக்கப் பட்ட விவகாரம் போன்ற பிரச்சினை களை பேரவையில் எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை 60 ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு, சிறப்புத் தீர்மானம் கொண்டுவர திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளன. இது தொடர்பான தீர்மானமும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக நாளை பேச வாய்ப்புள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல்
இதற்கிடையே, ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள் ளது. அந்த தேதியில் சட்டப் பேரவையில் போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த ஏற்கெனவே அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளதால், பேரவைக் கூட்டத்தை அதற்கு முன்னதாகவே முடிக்க வாய்ப்புள்ளது. அலுவல் ஆய்வுக்குழு மீண்டும் கூடி இது தொடர்பாக முடிவெடுக்கும் என்றும் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.