கொளத்தூர் தொகுதி மக்களுக்கு 10 ஆயிரம் குடங்கள்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கொளத்தூர் தொகுதி மக்களுக்கு 10 ஆயிரம் குடங்கள்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Updated on
1 min read

குடிநீரை சேமித்து வைக்க கொளத்தூர் தொகுதி மக்களுக்கு 10 ஆயிரம் குடங்கள் வழங்கும் பணியை அத்தொகுதியின் எம்எல்ஏ-வும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

கொளத்தூர் தொகுதியில் நேற்று சுற்றுப் பயணம் செய்த அவர், அங்குள்ள நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர் ரமணா நகரில் உள்ள 500 குடும்பங்களுக்கு 1,000-க்கும் அதிகமான தண்ணீர் குடங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மறைந்த திமுக நிர்வாகி பாஸ்கரனின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இவற்றை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பது தெரியவில்லை. கொளத்தூர் தொகுதியில் குடிநீர் பிரச்சினையால் தவிக்கும் மக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள உதவும் வகையில் 10 ஆயிரம் குடங்கள் வழங்கும் பணியை தொடங்கியுள்ளோம்.

சென்னையில் இரு நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும் நிலை வந்துள்ளது. திமுக ஆட்சியில் குடிநீர் தட்டுப்பாடு வந்தபோது ஆழ்துளை கிணறு களை அமைத்தும், கல்குவாரி, கொள்ளிடம், நிலத்தடி நீர் ஆகியவற்றை பெறும் வகை யிலும் போர்க்கால நடவடிக்கை கள் எடுக்கப்பட்டன. ஆனால், இந்த ஆட்சியில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினை களுக்காகவும் மக்கள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இந்த அரசு இல்லை.

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக பேரம் நடந்தது தொடர்பாக இடைத்தரகர் ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவர்களது உள்கட்சி பிரச்சினை. எனவே, நான் தலையிட்டு விமர்சிக்க விரும்பவில்லை.

வணிகர் சங்க மாநாடு நடைபெறுவதால் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டு கோள் விடுத்துள்ளார். விவசாயிகள் உரிமைகளை மீட்பதற்காக அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு வணிகர்களும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

பின்னர் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 262-வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி திருவிக தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in