

அரசுப் போக்குவரத்து ஊழியர் களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத் தில் சம்பள உயர்வு எவ்வளவு என்பது குறித்து அரசுத் தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவினருடன் போக்குவரத்து துறை செயலாளர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 1.43 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் அமைக்கப்படுகிறது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, 13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் 8-வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த 2-ம் தேதி நடந்தது. நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. ‘புதிய ஊதிய ஒப்பந்தத்தில் 50 சதவீத சம்பள உயர்வு வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் ரூ.21 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை தொழிற்சங்கங் கள் வலியுறுத்தின.
இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசுத் தரப்பு குழு உறுப்பினர்களான நிதித்துறை கூடுதல் செயலாளர் ஆனந்தகுமார், துணை செயலாளர் எச்.கிருஷ்ணன் உன்னி உள்ளிட்டோருடன் போக்கு வரத்து துறை செயலர் பி.டபிள்யு.சி.டேவிதார் நாளை (12-ம் தேதி) ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் இக்கூட்டம் நடக்கிறது. போக்குவரத்துக் கழகங்களின் தற்போதைய நிதி நிலவரம், வருவாயைப் பெருக்குவதற்கான வழிகள், சம்பள நிர்ணயம் உள்ளிட்டவை குறித்து இதில் பேச உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.