Published : 08 Apr 2014 11:56 AM
Last Updated : 08 Apr 2014 11:56 AM

தனியார் நிறுவனம் ஏ.டி.எம். மையங்களுக்கு கொண்டு சென்ற ரூ.2 கோடி பறிமுதல்: உரிய ஆவணத்தை காட்டியதால் மீண்டும் ஒப்படைப்பு

உரிய ஆவணமின்றி ஏ.டி.எம். மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 94 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். பின்னர் ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டதால் பணம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை, அண்ணா நகர், சாந்தி காலனி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வங்கி ஏ.டி.எம். மையங்களில் ரொக்கப் பணத்தை நிரப்புகிற பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு வேனில் உரிய ஆவணம் இல்லாமல், ஒரு கோடியே 94 லட்சம் ரூபாய் எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து தேர்தல் அதிகாரிகள், அந்த பணம் மற்றும் அதனை எடுத்துச் சென்ற வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மத்திய சென்னை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பிறகு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் உரிய ஆவணத்தை தேர்தல் அதிகாரிகளிடம் காண்பித்ததையடுத்து பணம் மற்றும் வேன் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x