

இலங்கையில் உள்ள 26 மீனவர்கள் 131 படகுகளை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடித்தளத்தில் இருந்து ஒரு விசைப்படகில் 8 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். அவர்களை 22-ம் தேதி அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்து காரை நகர் கொண்டு சென்றனர். அதேபோல், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு விசைப்படகில் சென்ற 8 மீனவர்களும் கைது செய்யப்பட்டு தலைமன்னார் கொண்டு செல்லப்பட்டனர். பாக் நீரிணை பகுதியில் தங்கள் பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களை கைது செய்வதை இலங்கை கடற்படையினர் தங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
மேலும், மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளையும், உபகரணங்களையம் விடுவிப்பதில்லை என்பதை அவர்கள் நிலைப்பாடாக கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக தொடர்ந்து கைது செய்யப்படுவதாலும், படகுகளை விடுவிக்காததாலும், வாழ்வாதாரத்தை இழந்த தமிழக மீனவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.
எனவே இந்த விஷயத்தில் தாங்கள் நேரடியாக தலையிட்டு, இலங்கையின் உயர்மட்ட அளவில் பேசி, மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகள், உபகரணங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 26 மீனவர்கள் மற்றும் 131 படகுகளை விரைவில் மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.