

மறைந்த பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரின் உடல் சென்னையில் நேற்று தகனம் செய்யப்பட்டது. திரையுலகினர் ஏராளமானோர் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
‘வீரத்திருமகன்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.சி.திருலோகசந்தர். ‘அன்பே வா’, ‘ராமு’, ‘நானும் ஒரு பெண்’, ‘அதே கண்கள்’, ‘காக்கும் கரங்கள்’ உள்ளிட்ட 65 படங்களை அவர் இயக்கியுள்ளார். பல்வேறு திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஏ.சி.திருலோகசந்தர் நேற்று முன்தினம் காலமானார்.
அவரது உடலுக்கு ஏவி.எம்.சரவணன், இயக்குநர் எஸ்பி.முத்துராமன், நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, நடிகை கே.ஆர்.விஜயா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது உடல் நேற்று மாலை 5 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கருணாநிதி இரங்கல்
இயக்குநர் ஏ.சி.திருலோக சந்தர் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித் துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழம்பெரும் திரைப்பட இயக்கு நரும், பல வெற்றிப் படங்களை இயக்கியவருமான ஏ.சி.திருலோகசந்தரின் மறைவு செய்தி யறிந்து மிகவும் வருந்துகிறேன். தனிப்பட்ட முறையில் அவர் என்னிடம் பற்றும் பாசமும் கொண்டவர். திருலோகசந்தரின் மறைவு அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு மட்டுமல்லாது திரைப்படத் துறையினருக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.