

இலங்கை கடற்படையினர் வசம் உள்ள 21 மீனவர்கள் மற்றும் 91 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்தில் இருந்து ஒரு விசைப்படகில் சென்ற 6 மீனவர்கள் 9-ம் தேதி அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
பாக்ஜல சந்தியில் தங்கள் பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதும் தொடர்கிறது. இது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
ஏற்கெனவே, இந்த மாதத்தில் கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்கள் இன்னும் இலங்கை சிறைகளில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். 91 மீன்பிடி படகுகளும் இலங்கை வசம்தான் உள்ளது. மீனவர்களை விடுவித்தாலும், அவர்களது படகுகளை விடுவிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை இலங்கை கொண்டுள்ளது. ஏற்கெனவே வாழ்வாதாரத்தை இழந்து திணறி வரும் தமிழக மீனவர்கள் மத்தியில் இது பெரும் விரக்தியை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அரசின் உயர்நிலையில் இருப்பவர்களிடம் எடுத்துச் சென்று , அவர்களுடன் பேசி, விரைவில் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கச்சத்தீவு தொடர்பான 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தங்கள் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என நான் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்தவழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துள்ளது. இதனால், சர்வதேச கடல் எல்லை தொடர்பான முடிவம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்தியா- இலங்கை இடையிலான 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்வதன் மூலம் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை திருப்பி பெற முடியும் என தமிழக அரசு உறுதியாக நம்புகிறது.
எனவே, நீங்கள் நேரடியாக தலையிட்டு, வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இலங்கை அதிகாரிகளுடன் பேசி, இந்த விஷயத்தில் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும். மேலும், 21 மீனவர்கள், 91 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.