

தென் வங்கக் கடலின் மத்திய பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டிவருகிறது.
தென் வங்கக் கடலில் உருவாக்கியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்றும், சென்னையில் அவ்வப்போது கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டமலம், புயலாக மாறுமா இல்லையா என்பது இப்போது தெரியாது என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை...
விடிய விடிய மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
நெருங்கும் வடகிழக்கு பருவ மழை...
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை கடைசி கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருப்பதாகவும், இன்னும் 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுவதாகவும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை தொடரும். தமிழ்நாட்டுக்கு அதிக மழை கிடைப்பது இந்த பருவத்தில்தான். இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை வரும் 22ம் தேதி வாக்கில் தொடங்கும் என வானிலை அறிவிப்பு தெரிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
மேலும் இந்திய பெருங்கடலில் இலங்கைக்கு அருகே மேல் அடுக்கு சுழற்சி மையம் கொண்டுள்ளதால் தென் தமிழகத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதே போல் வெப்ப சலனம் காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது.
வட கிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டால் இம்மாத இறுதியில் மேலும் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டெல்டாவில் விவசாயிகள் மகிழ்ச்சி...
டெல்டாவில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போன நிலையில் டெல்டா மிகவும் காய்ந்து போய் கிடந்தது. இந்த ஆண்டு மேட்டூர் தண்ணீர் திறக்கப்பட்டு வாய்க்கால் நிறைய சென்றாலும் வறட்சி காரணமாக அது வயலுக்குப் பாயாமல் விவசாயம் பொய்த்துப்போய் விடும் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் அக்டோபர் 22 முதல் பருவமழை தொடங்கப்போகிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தாலும் இலங்கையில் ஏற்பட்ட வானிலை மேலடுக்குசுழற்சி காரணமாக சனிக்கிழமை முதலே தமிழகத்தில் மழை தொடங்கிவிட்டது. பருவமழை தொடங்கிவிட்டபடியால் மேட்டூர் தண்ணீருக்கு எந்த தேவையும் இருக்காது.
தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பொறையார், சீர்காழி, கொள்ளிடம் என எல்லா இடங்களிலும் சனி இரவு முதல் பல இடங்களில தொடர்ந்து லேசானது முதல் பலத்த மழை வரை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடவுப் பணிகள் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. தீபாவளிக்குள் நடவுப் பணிகளை முடித்துவிட உத்தேசித்து வேலைகள் நடந்து வருகின்றன.