Published : 11 Feb 2014 10:00 AM
Last Updated : 11 Feb 2014 10:00 AM

வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது: பணப் பரிவர்த்தனை முடக்கம்; மக்கள் அவதி

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வங்கி ஊழியர்கள் திங்கள்கிழமை தொடங்கினர். இதன்காரணமாக வங்கிகளில் பண பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் முடங்கின.

தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக, வங்கிப் பணிகள் முழுமையாக முடங்கின. ஊழியர்கள் வராததால் வங்கிகள் வெறிச்சோடிக் காணப் பட்டன. பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியாமல் தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். குறிப்பாக வீடு, வாகன கடன், மின்சாரக் கட்டணம் உள்ளிட்டவைகளை குறித்த நாளில் செலுத்த முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

சனிக்கிழமை அரைநாள்தான் வங்கிகள் செயல்பட்டன. ஞாயிற்றுக் கிழமை விடுமுறை. அதற்கு அடுத்தநாளே வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளதால், வங்கித் தொடர்பான பணிகளை மேற் கொள்ள முடியாத சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தகவல் தெரியாமல் திங்கள்கிழமை காலை வங்கிகளுக்கு வந்த சிலர், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சென்னையில் பெரும்பாலான வங்கிகள் திறந்திருந்தாலும் ஊழியர்கள் எவரும் பணிக்கு வரவில்லை. திங்கள்கிழமை ஒரு நாளில் மட்டும், பல கோடி மதிப்புள்ள காசோலைகள், வரைவோலைகள் தேங்கின. ஏ.டி.எம். மையங்களில் சனிக்கிழமையே பணம் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.

இதனால், திங்கள்கிழமை பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டன. வங்கிகள் செயல்படாததால் பலரும் ஏ.டி.எம். மையங்களுக்கு படையெடுத்தனர். இதனால், திங்கள்கிழமை பிற்பகலிலேயே பல ஏ.டி.எம்.களில் பணம் தீர்ந்து விட்டது. இன்றும் வேலைநிறுத்தம் தொடர்வதால் ஏ.டி.எம்.களும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் உள்ள யூனியன் பாங்க் முன்பு திங்கள்கிழமை காலை திரண்ட வங்கி ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சி.எம்.பாஸ்கரன், ஸ்டேட் பாங்க் அதிகாரிகள் சங்க பொதுச்செயலர் தாமஸ் பிராங்கோ மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுவையில் வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை தொடங்கிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தால் வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

9-வது ஊதிய ஒப்பந்தக்காலம் முடிந்து 16 மாதங்கள் ஆகியும் 10-வது இருதரப்பு ஒப்பந்தம் போட மத்திய அரசு காலம் தாழ்த்துவதைக் கண்டிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வங்கிகள் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

160 கிளைகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.இதன் ஒரு பகுதியாக யூகோ வங்கி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பொது மக்கள், வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் கடும் பாதிப்படைந் தனர். திங்கள்கிழமை என்பதால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனைப் பணிகள் பாதிக்கப்பட்டன.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 130 தேசியமய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் 1,500 ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு வங்கி தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். வேலை நிறுத்தப் போராட்டத்தால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொது மக்களும் வர்த்தகர்களும் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். ஏடிஎம் மையங்களிலும் பணமில்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்துக் குள்ளாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x