

மொடக்குறிச்சி அருகே தனியார் வங்கி மேலாளர் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(60). இவரது மனைவி ராதாமணி (55). மகள் கிருத்திகா (30). இவர்கள் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சின்னியம் பாளையம் காந்திநகரில் வசித்து வந்தனர்.
மனோகரன் ஈரோட்டில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் காசாள ராகப் பணியாற்றி வந்தார். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் வங்கியில் மகள் கிருத்திகா மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கிருத்திகாவுக்கு தனது தாயார் ராதாமணியின் உறவினர் வகையில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வரும் 6-ம் தேதி ஈரோட்டில் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பால்காரர் பால் ஊற்றுவதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டில் கதவு பாதி திறந்த நிலையில் இருந்ததால், சந்தேகம் அடைந்த அவர் அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். அருகில் உள்ளவர்கள் வீட்டினுள் சென்று பார்த்தபோது மனோகரன் அவரது மனைவி ராதாமணி மற்றும் மகள் கிருத்திகா ஆகிய 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து மொடக்குறிச்சி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களைக் கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை குறித்து மொடக் குறிச்சி போலீஸார் நடத்திய விசாரணையில், மனோகரன் எழுதி வைத்த கடிதம் கிடைத்தது.
அதில், தங்கள் வசம் உள்ள நகை, சொத்து போன்ற விவரம்ங்களை குறிப்பிட்டு, அவற்றை எவ்வாறு பிரித்துக்கொள்ள வேண்டும் என்று மனோகரன் குறிப்பிட்டுள் ளார். மேலும், சொல்ல முடியாத காரணங்களால் எங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறோம் என்றும், இறுதிச்சடங்குக்கு தேவையான பணத்தையும் மேஜையில் வைத்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து மொடக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.