Published : 04 Mar 2017 02:27 PM
Last Updated : 04 Mar 2017 02:27 PM

பாலைவனமானது பவானி: செயலிழந்தது 193 கிராமங்களுக்கான குடிநீர்த் திட்டம்; கேரள அரசு கட்டும் தடுப்பணைகள் காரணமா?

கடும் வறட்சி காரணமாக மேட்டுப்பாளையம் பவானி நதி தண்ணீரின்றி காட்சியளிக்கிறது. இங்கு குடிநீருக்கே அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் பொதுமக்கள், “கேரளத்தில் ஒரு அணை கட்டி முடித்து, 2-வது அணைக்கான பணியை ஆரம்பித்த நிலையிலேயே ஆற்றுக்கு இந்த நிலை என்றால் இன்னமும் 5 அணைகளை கட்டினால் நிலைமை என்னாகும்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

காவிரியின் கிளை நதியான பவானியை நம்பி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் நீர்வரத்தை உத்தேசித்து, இன்னமும் பல்வேறு குடிநீர்த் திட்டங்களை உருவாக்க தமிழக அரசு முயன்று வருகிறது. மேலும், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கும் இதுவே நீராதாரமாகும்.

ஏறத்தாழ 60 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையை மட்டுமின்றி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி தரும் பவானி நதி தற்போது முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது. ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீர் மட்டுமே தற்போதைக்கு குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

பில்லூர் அணைக்கு மேலே உள்ள நீரிலிருந்து கோவை கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுவதால், தற்போது கோவை குடிநீர்த் திட்டங்களுக்கு தற்காலிகமாக பிரச்சினை இல்லாத நிலை நீடிக்கிறது. பில்லூருக்கு கீழே உள்ள பவானி நதிக்கரையிலிருந்தே மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளுக்கும், திருப்பூருக்கும் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அங்கே தேங்கியுள்ள தண்ணீர் மூலம் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல், தேங்கியுள்ள தண்ணீரின் மூலம் மட்டுமே இந்த திட்டம் செயல்படுமானால், இன்னமும் 15 நாட்களுக்குள் திருப்பூர், மேட்டுப்பாளையம் குடிநீர்த் திட்டங்களும் பாதிக்கப்படும் என்று பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கூத்தமண்டிப்பிரிவு அருகே மூலையூரில் செயல்படும் நீரேற்று நிலையம் மூலம் மேட்டுப்பாளையம் நகரத்துக்கு கீழ் உள்ள 9 ஊராட்சிகளை சேர்ந்த 193 கிராமங்களுக்கான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் பவானி முற்றிலும் வறண்டு விட்டது.

இந்த நீரேற்று நிலையப் பகுதியில் கடந்த மாதம் முதலே தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால், 2 மின் மோட்டார்களில் ஒரு மோட்டாரை இயங்கச் செய்து நீரேற்றி வந்தனர். 3 நாட்களுக்கு முன் அங்கு பள்ளங்களில் தேங்கியிருந்த நீரும் முற்றிலும் வற்றி விட்டது. நேற்று முன்தினத்திலிருந்து இந்த நீரேற்று நிலையத்தின் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.

இதனால், இந்த குடிநீர்த் திட்டத்தால் பயன்பெறும் கிராமங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. லாரிகளில் கொண்டுவரும் நீரை குடம் ரூ.1 முதல் ரூ.2 வரை விலைகொடுத்து வாங்க வேண்டியுள்ளது

இப்பகுதி மக்கள் கூறும்போது, “ஜே.ஜே நகரிலிருந்து பவானிசாகர் அருகே உள்ள டேம்காடு வரையுள்ள அனைவரின் நிலையும் இதுதான். இந்தப் பகுதியில் பவானி ஆறு வறண்டதே கிடையாது. புதுக்காடு, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி உள்ளிட்ட கிராமங்களிலும் உள்ளவர்கள், ஆடு மேய்ச்சலுக்கும், வாழைத்தோப்பில் விவசாயம் பார்ப்பதற்கும் அக்கரைக்கு பரிசலில் செல்வார்கள். இப்போது ஆற்றை நடந்தே கடந்துவிடலாம். அக்கரையிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

கேரள அரசு அட்டப்பாடியில் தடுப்பணை கட்டி முடித்துவிட்டது. அடுத்த அணையை இப்போதுதான் கட்டத்தொடங்கியிருக்கிறது. அதற்குள்ளாகவே பவானி ஆறு வற்றிவிட்டது என்றால், அனைத்து அணைகளையும் கட்டி முடித்தால் என்னவாகும்? எனவே, அணை கட்டும் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றனர்.

சிக்கதாசம்பாளையம், சிக்காரம்பாளையம், ஆலங்கொம்பு, சிறுமுகை உள்ளிட்ட கிராமங்களில் ஆற்றுப் பாசன விவசாயம் மட்டுமின்றி, பாசனக் கிணறுகளிலும் நீர் வற்றி ஒட்டுமொத்த விவசாயமுமே கேள்விக்குறியாகி விட்டதாகவும் இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x