

மக்கள் நலக் கூட்டியக்கத்தில் உள்ள கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மதிமுக தலைமை அலுவலகமான சென்னை தாயகத்தில் நடந்த இக்கூட்டத்தில் ம.ந.கூட்டணி ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். இதன்படி வரும் உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் 4 கட்சிகளும் சேர்ந்து சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை தேமுதிக தனித்து சந்திக்கும் என்று அக்கட்சி பொருளாளர் இளங்கோவன் கூறினார். ஆனால், அதை அக்கட்சித் தலைமை மறுத்துள்ளது.
கூட்டணியிலிருந்து விலகவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக, தமாகா ஆகியவை உள்ளாட்சித் தேர்தலிலும் ம.ந.கூட்டணியுடன் இணைந்து போட்டியிட வேண்டும். மக்கள் நலக் கூட்டணிக்கு வேறு கட்சிகள் வரலாம், போகலாம். ஆனால், மக்கள் நலக் கூட்டியக்கம் நிரந்தரமானது.
இவ்வாறு வைகோ கூறினார்.