

போராட்டம் நடத்தும் இளைஞர்கள் மீது காவல் துறையினர் தடியடி பிரயோகம் செய்யவோ, அச்சுறுத்தவோ கூடாது. அவர்கள் மீது மென்மையான போக்கையே கையாள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று இளைஞர்களும், மாணவர்களும் பொதுமக்களும் தொடர்ந்து அறவழியில் போராடிவரும் நிலையில் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. ஆனாலும் நிரந்தர சட்டம் தான் இதற்கு ஒரே தீர்வு அப்போதுதான் ஜல்லிக்கட்டு தடையின்றி தொடர்ந்து நடைபெரும் என்று அனைத்து தரப்பு மக்களும் ஒருமித்த கருத்தோடு குரல் கொடுத்து போராடிவருகின்றனர்.
எனவே தமிழக அரசு இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே ஜல்லிக்கட்டுக்கான சட்டமுன் வடிவ வரைவு கொண்டு வந்து அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தோடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதனடிப்படையில் தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எந்த விதமான தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி சுமுக தீர்வு காண வேண்டும். அனைவரும் அமைதியாக போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்கள் மீது காவல் துறையினர் தடியடி பிரயோகம் செய்யவோ, அச்சுறுத்தவோ கூடாது. அவர்கள் மீது மென்மையான போக்கையே கையாள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் தமிழக அரசு விரைந்து நிரந்தர சட்டத்தை இயற்றி உலக தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்துக்கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டினை உடனடியாக தமிழகம் முழுவதும் நடத்திட வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.