ஜல்லிக்கட்டு கோரி கைதானவர்களை விடுவிக்க வலியுறுத்தி மெரினாவில் இளைஞர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டு கோரி கைதானவர்களை விடுவிக்க வலியுறுத்தி மெரினாவில் இளைஞர்கள் போராட்டம்
Updated on
1 min read

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை விவேகானந்தர் இல்லம் எதிரே மெரினா கடற்கரையில் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டாவுக்கு தடை கோரியும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோரை விடுவிக்கக் கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும். ஜல்லிக்கட்டு இந்த மாதத்துக்குள் நடைபெற வேண்டும் என்றும் இளைஞர்கள் கூறியுள்ளனர்.

மெரினா அருகே ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி நடிகர்கள் மயில்சாமி, டி.ராஜேந்தர் ஆகியோர் போராட்டக் களத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களுடன் இணைந்து தொடர் முழுக்கங்களை எழுப்பினர்.

சமூக வலைதளங்களில் அழைப்பு

முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் விடுக்கப்பட்ட அழைப்பைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் பலர் பங்கேற்றுள்ளனர்.

ஸ்டாலின் ஆதரவு

இந்தப் போராட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். எந்த தலைவரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று அரசியலாக்க வேண்டாம் என்று இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து ஸ்டாலின் போராட்டக் களத்திலிருந்து திரும்பினார்.

மூன்று முறை பேச்சுவார்த்தை

காவல்துறையினர் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக அரசு குழு ஒன்றை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று போராட்டம் நடத்துபவர்கள் கூறியுள்ளனர்.

செல்போன் வெளிச்சத்தில் போராட்டம்

மெரினாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள், இளைஞர்கள் செல்போனில் டார்ச் லைட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக இளைஞர்கள் கூறுகையில், ''ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினத்தை கருப்பு குடியரசு தினமாக அனுசரிப்போம். தேசியக் கொடிக்குப் பதிலாக கருப்புக் கொடி ஏற்றுவோம். கருப்புச் சட்டை அணிவோம்.

ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் நோட்டாவுக்கே எங்கள் ஓட்டு என்று தெளிவாகப் பதிவு செய்வோம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்காத எந்தக் கட்சியையும் ஆதரிக்க மாட்டோம்'' என்று கூறினர்.

அதன் புகைப்படப் பதிவுகள்:

</p><p xmlns=""><img src="https://static.hindutamil.in/hindu/uploads/common/2017/01/17/merina_5_3119114a.jpg"></p><p xmlns=""><iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/coPvUPUt7fc" frameborder="0" allowfullscreen="" /></p>

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in