Published : 08 Aug 2016 10:03 AM
Last Updated : 08 Aug 2016 10:03 AM

சென்னையில் செப்டம்பர் 24-ம் தேதி பசுமை தீர்ப்பாய தென்மண்டல அமர்வுகள் திறப்பு விழா: பணிகளை தீர்ப்பாய தலைவர் ஸ்வதந்தர் குமார் ஆய்வு செய்தார்

சென்னை கல்சா மகாலில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வுகள் திறப்பு விழா செப்டம்பர் 24-ம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு கல்சா மகாலை புதுப்பிக்கும் பணிகளை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்தர் குமார் ஆய்வு செய்தார்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அலுவலகம், அரும்பாக்கத்தில் உள்ள தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் கடந்த 2013 முதல் தற்காலிகமாக இயங்கி வருகிறது. அதில் இரு அமர்வுகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு போதிய இடமின்றி வழக்கறிஞர்களும், அமர்வின் அலுவலர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இவற்றை இட மாற்றம் செய்வது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்தர் குமார், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்தில் சேதமடைந்த கல்சா மகாலை இதற்காக ஒதுக்க அரசு முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி கள் வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னை வந்திருந்த பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்தர் குமார், கல்சா மகாலை புதுப்பிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இயக்குநர் ஜெனரல் முகேஷ் குப்தா, தென் மண்டல அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ், பதிவாளர் பி.மோகன்ராஜ், மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் அதுல்யமிஸ்ரா உள்ளிட்டோர் அருகில் இருந்தனர்.

இது தொடர்பாக நீதிபதி பி.ஜோதிமணி கூறும்போது, “கல்சா மகாலை புதுப்பிக்கும் பணிகளை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். தற்காலிக இடத்தில் செயல்பட்டு வரும் பசுமை தீர்ப்பாய தென்மண்டல இரு அமர்வுகளும், கல்சா மகாலுக்கு மாற்றப்பட்டு, செப்டம்பர் 24-ம் தேதி திறப்பு விழா நடைபெறுகிறது. அப்போது, சுற்றுச்சூழல் இழப்பீட்டு ஆணை யம் கைவிடப்பட்ட நிலையில், அதன் வழக்குகளை விசாரிக்கும் 3-வது அமர்வும் தொடங்கப்படும்.

இவ்விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தேவ் ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் தென் மண்டல அளவிலான சுற்றுச்சூழல் மாநாடும் நடைபெற உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x