Last Updated : 10 Sep, 2016 03:17 PM

 

Published : 10 Sep 2016 03:17 PM
Last Updated : 10 Sep 2016 03:17 PM

மகாகவியின் நினைவு நாளை செப். 12-ம் தேதி அனுசரிப்பதே சரியானது: பாரதி ஆய்வாளர் வலியுறுத்தல்

மகாகவி பாரதியாரின் நினைவு நாளை செப்டம்பர் 12-ம் தேதி அனுசரிப்பதுதான் சரியானதாக இருக்கும் என பாரதி ஆய்வாளர் ஒருவர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்.

வரலாற்று சம்பவங்கள், விடுதலைப் போராட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற நாட்கள், விடுதலைப் போராட்ட வீரர்களின் பிறந்த நாள், நினைவு நாள் போன்றவை வரலாற்று முக்கியத்துவம் பெறுவதால் இதில் பிழை ஏற்பட்டால் எதிர்கால வரலாற்றுப் பதிவுகளிலும் தவறான பதிவே நீடிக்கும் நிலை ஏற்படும்.

செப்டம்பர் மாதம் 11-ம் தேதி மகாகவி பாரதியாரின் நினைவு நாள் என தமிழகம், புதுச்சேரி அரசுகளால் அனுசரிக்கப்படுவது பிழையானது என பாரதி ஆய்வாளரும், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான முனைவர் ச.சுப்புரெத்தினம் தெரிவித்துள்ளார்.

காரைக்காலைப் பூர்வீகமாகக் கொண்டவரும் தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் வசித்து வருபவருமான பாரதி ஆய்வாளர் சுப்புரெத்தினம், 1990களில் புதுவை பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த முனைவர் அ.பாண்டுரங்கனின் வழிகாட்டுதலின்படி, ‘சுப்ரமணிய பாரதியாரும்- ஸ்ரீ அரவிந்தரும்’ என்ற தலைப்பில் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

அப்போது, பாரதியார் குறித்த நூல்களை ஆய்வு செய்ததில் பாரதியார் இறந்த நாள் குறித்து சில நூல்களில் செப்டம்பர் 11 என்றும், சில நூல்களில் செப்டம்பர் 12 என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததை சுப்புரெத்தினம் கண்டுள்ளார். இந்த முரண்பாடுகளைக் களைய முயன்ற இவர், பாரதியாரின் இறந்த நாள் குறித்த பதிவுச் சான்றிதழ் நகல் வேண்டி சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பினார். அதன்பொருட்டு, மாநகராட்சியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பாரதியாரின் இறப்புச் சான்றிதழில், அவர் இறந்தது 1921-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி என குறிப்பிடப்பட்டிருந்தது.

பாரதியார் செப்டம்பர் 11-ம் தேதி நள்ளிரவு ஒன்றரை மணிக்கு மேல் இறந்துள்ளார். பாரதியாரின் உறவினர்கள் ஆங்கில காலண்டர் முறைப்படி நள்ளிரவு 12 மணிக்கு மேல் என்பதால் அடுத்த நாள் என்றே கணக்கில் கொள்ளப்படும் எனக்கருதி செப்டம்பர் 12-ம் தேதி இறந்ததாகக் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளனர். ஆனால், விடிந்தால்தான் மறுநாள் கணக்கில் வரும் என்றுகருதி சில புத்தகங்களிலும், பேச்சு வழக்கிலும் பாரதியார் இறந்தது செப்டம்பர் 11-ம் தேதி என குறிப்பிடப்பட்டு, அதுவே பின்னர் நிலைத்துவிட்டது.

அதிகாரபூர்வமான பதிவு இருக்கும்போது மகாகவி பாரதியாரின் நினைவு நாளை செப்டம்பர் 12-ம் தேதி அனுசரிப்பதே மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்கிறார் சுப்புரெத்தினம்.

தமிழக அரசும், புதுச்சேரி அரசும் பாரதியார் நினைவு நாள் செப்டம்பர் 12-ம் தேதிதான் என அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று தக்க ஆவணங்களுடன் 20 ஆண்டுகளாக இரு மாநில அரசுகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பி வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு மனுவை அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு மாநில தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவையும், புதுச்சேரியில் உள்ள பாரதி அன்பர்கள் அமைப்பும் இவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளன.

வரலாற்றுப் பிழை திருத்தப்பட வேண்டும்

“பல ஆண்டுகளாக இருந்துவரும் இந்த வரலாற்றுப் பிழை தமிழகம், புதுச்சேரி அரசுகளால் திருத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கை” என்று கூறும் சுப்புரெத்தினம், எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் நினைவு இல்லம் மற்றும் மணிமண்டபத்தின் கல்வெட்டில் செப்டம்பர் 12-ம் தேதிதான் நினைவு நாள் என 2 ஆண்டுகளுக்கு முன்னரே திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x