

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த எம்.எஸ்.எஸ்.பாண்டியன், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலமானார். அவருக்கு வயது 56.
திராவிட இயக்கம் பற்றி ஆங்கிலத்தில் பல ஆய்வு நூல்களை இவர் எழுதியுள்ளார். ‘பிராமணர்’ ‘பிராமணரல்லாதோர்’ என்ற அடையாளங்கள் இருபதாம் நூற்றாண்டு தமிழக அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்களை ஆய்வுசெய்து இவர் எழுதிய நூல், மிகவும் நுட்பமான அரசியல் நூலாக கருதப்படுகிறது.
எம்.ஜி.ஆரின் அரசியல், சினிமா பங்களிப்பு குறித்து இவர் எழுதிய நூல் பலரது கவனத்தை ஈர்த்தது. லண்டனில் இருந்து இயங்கிவரும் தெற்காசிய கலாச்சார கல்வி இதழின் ஆசிரியர் குழுவிலும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல முக்கிய இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள், மிகப் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.