

ஜனவரி 23-ம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக விசாரணை ஆணைய நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் மயிலாப்பூர் அருகே 2-வது முறையாக நேற்று ஆய்வு செய்தார்.
தமிழக பாரம்பரியமிக்க விளையாட்டான ஜல்லிக்கட்டுக் குரிய தடையை நீக்கக் கோரி சென்னை, மதுரை, கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன. சென்னை மெரினாவில் ஜனவரி 23-ம் தேதி ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலை மையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
கடந்த 9-ம் தேதி காலையில் சென்னை மெரினாவில் அவர் தனது விசாரணையை தொடங்கினார். விசாரணையின் முதல்கட்டமாக நடுக்குப்பம், ஐஸ்அவுஸ் காவல்நிலையம், பாரதி சாலை, விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுசெய்தார். அதைத் தொடர்ந்து கோவை, மதுரையிலும் விசாரித்தார்.
இந்நிலையில், நேற்று மாலை யில் சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டர் அருகே உள்ள ரூதர் புரத்தில் நீதிபதி ராஜேஸ்வரன் ஆய்வு செய்தார். அங்குள்ள மக்கள், மீனவர்களின் கருத்து களைக் கேட்டறிந்தார். சுமார் 30 நிமிடங்கள் ஆய்வுசெய்த பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.