

சட்டப்பேரவையில் ரூ.28 ஆயிரத்து 942 கோடியே 69 லட்சத்துக்கான முதல் துணை நிதிநிலை அறிக் கையை நிதித் துறையையும் கவ னித்து வரும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
2016-17-ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.28 ஆயிரத்து 942 கோடியே 69 லட்சம் நிதியை ஒதுக்க வழிவகை செய்கின்றன. கடந்த ஜூலை 21-ல் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய் யப்பட்டது. அதன்பிறகு புதுப் பணிகள், புது துணைப் பணிகளுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையை அந்நிதிக்கு ஈடு செய்வதும் துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.
உதய் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ரூ.22 ஆயிரத்து 815 கோடி கடனை அரசே வழங்க முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் செலுத்த வேண்டிய ரூ.4 ஆயிரத்து 523 கோடியே 19 லட்சம் அளவிலான கடன்கள், முன் பணங்கள், வழிவகை முன் பணங்கள், அவற்றின் மீதான வட்டி, அபராத வட்டி ஆகியவற்றை மூலதன உதவியாக மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக ரூ.4 ஆயிரத்து 123 கோடியே 19 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. துணை நிதிநிலை அறிக்கையில் இதற்காக ரூ.3 ஆயிரத்து 958 கோடியே 19 லட்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
வார்தா புயலால் சேதமடைந்த மின் விநியோகக் கட்டமைப்புகளை சீர்செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ரூ.400 கோடி முன்பணம் அனுமதிக் கப்பட்டது. மாநிலப் போக்குவரத் துக் கழகங்களுக்கு டீசல் மானியம் வழங்க இதுவரை ரூ.261 கோடியே 69 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
வார்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.585 கோடியே 45 லட்சம், குடிநீர் வழங்க ரூ.105 கோடி, சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு ரூ.171 கோடியே 69 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை ஊக்குவிக்க ரூ.46 கோடியே 31 லட்சம், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க ரூ.92 கோடியே 40 லட்சம், கோயம்பேட்டில் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க ரூ.56 கோடி, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிய அரசு சட்டக் கல்லூரிகள் கட்ட ரூ.117 கோடியே 30 லட்சம் ஆகியவற்றுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு அடையாளமாக ஒவ்வொரு திட்டத்துக்கும் ரூ.1,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகைகள் மானியத்தில் ஏற்படும் மீதத்திலிருந்து மறு நிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.