

அரசு மருத்துவமனையின் கவனக் குறைவால் கையை இழந்த சிறுவனுக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு எதிராக தமிழ்நாடு மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
நான் கடந்த 2006 ஜனவரி 16-ம் தேதி, என் மகன் விஷ்ணுவுடன் கிண்டி குழந்தைகள் பூங்காவுக்கு சென்றிருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாக என் மகன் தவறி விழுந்துவிட்டான். இதில் அவனுடைய இடது கை மணிக் கட்டில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தேன்.
மணிக்கட்டில் காயம் பலமாக இருந்ததால் அங்கிருந்த மருத்துவர் கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத் தினார்கள்.
நான் உடனடியாக என் மகனை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கிருந்த எலும்பு முறிவு துறை மருத்து வர்கள் பரிசோதனை செய்து விஷ்ணுவுக்கு கையில் மாவுக்கட்டு போட்டனர்.
2 நாட்கள் கழித்து மருத்துவ மனைக்கு மீண்டும் சிகிச்சைக்காக சென்றபோது மருத்துவர்களிடம் என் மகன் வலியால் வேதனைப் படுவதாக கூறினேன். அதற்கு மருத்துவர்கள் மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தில் ஊசி ஒன்றை போட்டனர்.
பின்னர் அடுத்த மாதம் 20-ம் தேதி இரண்டாவது மாவுக்கட்டு போடச் சென்றேன். அப்போது என் மகன் தினமும் இரவில் வலியால் துடிப்பதால், மாவுக்கட்டை கொஞ்சம் தளர்த்தி கட்டுமாறு தெரி வித்தேன். மாவுக்கட்டை கட்டிவிட்ட டாக்டர்கள் சில மருந்துகளையும் அளித்தனர்.
மறுநாள் இரவு, விஷ்ணுவின் இடது கையில் மாவுக்கட்டு கட்டிய இடத்துக்கு அருகில் துர்நாற்றம் வந்தது, காயம்பட்ட இடத்தில் இருந்து சீழ் வெளியேறத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி யடைந்து, மகனை மீண்டும் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றோம். 5 மணிநேர காத்திருப்புக்கு பிறகு தான் டாக்டர்களைப் பார்க்க முடிந்தது. விஷ்ணுவின் இடது கையில் கட்டப்பட்டிருந்த மாவுக் கட்டை அவிழ்த்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தினர்.
அங்கு விஷ்ணுவைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாவுக் கட்டை இறுக்கமாக கட்டியதால் இடது கையில் ரத்த ஓட்டம் தடை பட்டு, அதன் விளைவாக கையே அழுகி உள்ளது என்று கூறினர். அழுகிய கையை அறுவைச் சிகிச்சை மூலம் உடனடியாக எடுக்காவிட்டால் அவனது உயிருக்கே ஆபத்து நேரிடும் என்று எச்சரித்தனர்.
இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி, விஷ்ணுவின் இடது கை அகற்றப்பட்டது.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கவனக் குறைவான சிகிச்சையால், என் மகன் கையை இழக்க நேரிட்டது. இதற்கு நஷ்டஈடாக ரூ.50 லட்சம் தரவேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த மாநில நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஆர்.ரகுபதி, உறுப்பினர்கள் ஜெ.ஜெயராம், பி.பாக்யவதி ஆகியோர் அளித்த தீர்ப்பில், “சிறுவன் விஷ்ணுவின் இடது கையில் ஏற்பட்ட காயத்துக்கு சரியாக சிகிச்சை அளிக்காமல், அந்த காயத்துக்கு மேலே எலும்பு முறிவு மாவுக்கட்டு போட்டுள்ளனர்.
இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு சிறுவன் இடது கையை இழக்க நேரிட்டுள்ளது. மருத்துவர்களின் அலட்சியமான போக்கு மற்றும் கவனக் குறைவு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு இழப்பீடாக சம்பந்தப் பட்ட ராயப்பேட்டை அரசு மருத்துவ மனை நிர்வாகம், ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டை சிறுவன் விஷ்ணுவின் பெயரில் ஏதேனும் ஒரு தேசிய வங்கியில் மறுமுதலீட்டு திட்டத்தில் 3 ஆண்டுகள் போட வேண்டும். அந்தத் தொகைக்கான வட்டியை 3 மாதங்களுக்கு ஒருமுறை மனுதாரர் பெற்றுக் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.