

பூந்தமல்லி நெடுஞ்சாலையின் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால், அமைந்தகரை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்று, பூந்தமல்லி நெடுஞ்சாலை. பாரிமுனை, கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் மிக முக்கியமான சாலை இது. பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் பெரியமேடு, கீழ்ப்பாக்கம் பகுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மெட்ரோ ரயில் பணிகள் நடந்துவருகின்றன.
அதோடு அரும்பாக்கம் பகுதியில் நெல்சன்மாணிக்கம் சாலை, அண்ணா நகர் 3-வது பிரதான சாலை சந்திப்புகளை இணைத்து மேம்பாலங்கள் அமைக்கும் பணியும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.
இதனால், நெரிசலை குறைப்பதற்காக பூந்தமல்லிநெடுஞ்சாலையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன இருப்பினும் இங்கு போக்குவரத்து நெரிசல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்தகரை பகுதியில், நடைபாதை ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர் கூறுகையில், “அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கூவம் நதி பாலம் முதல், ஷெனாய் நகர் லெட்சுமிடாக்கீஸ் சாலை சந்திப்புவரையான அரை கி.மீ.,
தூரத்துக்கு மேல் இரு மருங்கிலும், தேநீர் கடைகள், உணவகங்கள், இனிப்பகங்கள், மளிகை கடைகள், காலணியகம், பேன்சி ஸ்டோர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை, சாலையின் இரு மருங்கிலும் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிறு சிறு விபத்துகளும் அவ்வப்போது ஏற்படுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்” என்றார்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அமைந்தகரை பகுதியில் சாலை பகுதிகள், ஒரே அளவுகொண்டவையாக இல்லை. எனவே, நான்கு வழி சாலையாக உள்ள அச்சாலையை ஆறு வழி சாலையாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கி உள்ளோம்.
அதன்படி, கடந்த ஆண்டு தொடக்கத்தில் டி.பி. சத்திரம் பிரதான சாலை சந்திப்பு முதல், லெட்சுமி டாக்கீஸ் சாலை சந்திப்பு வரை உள்ள, அரசு புறம்போக்கு நிலத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளோம்.
மற்ற பகுதிகளில் உள்ள தனியார் நிலங்களை ஆர்ஜிதம் செய்யும் நடவடிக்கையில் உள்ளோம். மூன்று மாதத்தில் அப்பணி முடிந்துவிடும். அதன் பிறகு ஆறு வழி சாலை அமைக்கும் பணி தொடங்கும். அப்பணி முடிந்தால், அமைந்தகரையில் தொடரும் நடைபாதை ஆக்கிரமிப்பு பிரச்னை மற்றும் போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.