

நெய்வேலி என்எல்சி சுரங்க விரிவாகத்துக் நிலம் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரி வித்து 4 பெண்கள் உட்பட 5 பேர் தீக்குளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் என்எல்சி வாகனங்களை கல்வீசித் தாக்கினர்.
நெய்வேலி லிக்னைட் கார்ப்ப ரேஷன் 2-ம் சுரங்கத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக சுரங்கத்தை ஒட்டி அமைத்துள்ள ஊ.ஆதனூர், கம்மாபுரம், மும்முடிசோழகன் உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 2004-ம் ஆண்டு முதல் நடை பெற்று வருகிறது. இதையடுத்து, 2 ஆயிரம் ஏக்கர் நிலம் படிப்படியாக கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
நிலம் வழங்கியவர்கள் தங் களுக்கு போதிய இழப்பீடு தர வில்லை என புகார் கூறுகின்றனர். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சுமுக முடிவு ஏற்படவில்லை.
இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் வரை வழங்க வேண்டும். வாழ்வாதாரத் தொகையாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். வீட்டு மனை இழப்பீட்டுத் தொகையாக ஒரு சென்ட் பரப்பளவுக்கு ரூ.50 ஆயிரம் என உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் என்எல்சி வாகனம் மீது கல்வீசி தாக்குகின்றனர்.
இந்நிலையில், என்எல்சி நில எடுப்புத் துறையினர், ஊ.ஆதனூர் கிராமத்துக்கு நேற்று சென்று, கையகப்படுத்த ஒப்புக்கொண்ட நிலங்களை அளவீடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டதால், ஊ.ஆதனூரைச் சேர்ந்த தேவகி, செல்வி, பூங்கோதை, ராணி, வெற்றி வேல் ஆகியோர் தங்கள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தனர். அதில் காயமடைந்தவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த தேவகி தவிர மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இச்சம்பவத்தால் ஆத்திர மடைந்த கிராம மக்கள், அந்த வழியாக வந்த என்எல்சி வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கினர். என்எல்சி அதிகாரிகள் 3 பேரை சிறைபிடித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக சென்றிருந்த போலீஸார் அதிகாரிகளை மீட்டு, அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக என்எல்சி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், கம்மாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஊ.ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து ஊ.ஆதனூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ராஜா கூறும்போது, “கடந்த 2004-ம் ஆண்டு நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளனர். தற் போதைய நில மதிப்புப்படி இழப்பீடு வழங்க கோருகிறோம். அதேபோன்று வீட்டுக்கு ஒரு வருக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அனைத்தையும் நிராகரித்துவிட்ட னர். ஆனால், ஒடிஸா, ஆந்திரா, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றனர்” என்றார்.
இதுதொடர்பாக என்எல்சி நில எடுப்புத் துறை அதிகாரி அண்ணாதுரையிடம் கேட்ட போது, “ஏற்கெனவே கிராம மக்கள் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில்தான் நிலத்தை கையகப்படுத்தச் சென்றோம். ஆனால் அவர்கள் புதிதாக சில கோரிக்கைகளை முன்வைக் கின்றனர்” என்றார்.
விருத்தாசலம் கோட்டாட்சியர் கிருபானந்தம் கூறும்போது, “அன்றைய சூழலில் நிலம் வழங்க ஒப்புக்கொண்டு, தற்போது கூடுதல் இழப்பீடு கோருவது தொடர்பாக என்எல்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி பலனில்லை. மேலும், குடும்ப அட்டை வைத்திருப்போர் அனைவருக்கும் மாற்று இடம் கேட்கின்றனர். அதற்கு என்எல்சி நிர்வாகம் மறுத்துவிட்டது. விரைவில் சுமுகத் தீர்வுக்கு வழி காணப்படும்” என்றார்.