

தமிழக முதல்வருக்கு எனது குடும்பத்தினர் சார்பில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் என்று பேரறிவாளன் தந்தை குயில்தாசன் தெரிவித்தார்.
அவர் ‘தி இந்து’விடம் கூறியது:
தமிழக முதல்வர் ஜெயல லிதாவின் அறிவிப்பு பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாத என் மகனை 23 ஆண்டுகள் சிறையில் அடைத்து விட்டனர். அவனைத் தூக்கில் போடப் போகிறார்கள் என்ற அறிவிப்பு வந்தபோது நானும், எனது குடும்பத்தினரும் அடைந்த வேதனைக்கு அளவே கிடையாது. எனது மகனும், ‘நமக்கு யாரும் இல்லை, நாம்தான் நம்மைக் காப்பாற்றி கொள்ள வேண்டும்’ எனக் கூறினான்.
என் மகனைக் காப்பாற்றியே தீர வேண்டும் என உறுதிபூண்டு, என் மனைவி ஒரு போராளியாகவே மாறினார். குடியரசுத் தலைவருக்கு பேரறிவாளன் எழுதிய கடிதத்தை, தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் புத்தகமாக வெளியிட்டோம்.
மனித சங்கிலிப் போராட்டம், உண்ணாவிரதப் போராடம் என ஏராளமான போராட்டங்களை பல்வேறு அமைப்பினர் நடத்தினர். அப்போதெல்லாம், எனது மகனுக்காக காவல் துறையினரின் தாக்குதலை பலர் தாங்கிக் கொண்டனர். இந்த தருணத்தில் அவர்களுக்கெல்லாம் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள், எனது மகனின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தனர். அந்த செய்தி கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். வழக்கறிஞர்கள், நண்பர்கள் அனைவரும், பேரறிவாளன் விடுதலையாவதற்கு இன்னும் 6 மாதம், ஒரு வருடமாகலாம் எனத் தெரிவித்தனர்.
ஆனால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் திடீரென அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றார்.