

பல்லாவரம் நகராட்சியில் ரூ.24 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடை திட்டத்தை விரிவு படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பல்லாவரம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. 2011-ம் ஆண்டு கணக்கின்படி மொத்த மக்கள்தொகை 2 லட்சத்து 15 ஆயிரத்து 452 பேர். தற்போது மக்கள்தொகை 3 லட்சத்தை தொடுகிறது. மொத்தம் 1,630 தெருக்கள் உள்ளன. நகராட்சியில் கடந்த 2009-ம் ஆண்டு ரூ.75 கோடியே 33 லட்சத்தில் 195 கிலோ மீட்டர் தூரம் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பணிகள் நடந்தன. 2012-ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 22 ஆயிரத்து 520 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நகராட்சியில் மொத்தம் 55 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. மொத்தம் உள்ள 252 கிலோ மீட்டர் தூரத்தில், 195 கிலோ மீட்டர் தூரம் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் முடிந்துள்ளன.
தற்போது விடுபட்ட பகுதி கள், புதியதாக உருவான பகுதிகளையும் பாதாளச் சாக்கடை திட்டத்தில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரூ.24 கோடியே 6 லட்சத்தில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற பிறகு நகராட்சியின் பாதாளச் சாக்கடை திட்ட வைப்பு நிதி மூலமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுகுறித்து நகராட்சித் தலைவர் நிஷார் அகமது கூறும்போது, “பல்லாவரம் நகராட்சி வளர்ந்து வரும் நகராக உள்ளது. பாதாளச் சாக்கடை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் விடுபட்ட பகுதிகள், புதிய குடியிருப்புப் பகுதிகள் போன்ற இடங்களில் பாதாளச் சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம். நகராட்சி யில் பாதாளச் சாக்கடை திட்டத் துக்காக ஏற்கெனவே பெறப்பட்ட வைப்புத் தொகையைக் கொண்டு புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” என்றார்.
நகராட்சி ஆணையர் சிவக் குமார் கூறும்போது, “நகராட்சி முழுவதும் பாதாளச் சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்து, அரசுக்கு ரூ.24.06 கோடி மதிப்பில் கருத்துரு அனுப்பி இருக்கிறோம். கிடைத்தவுடன் 10 பிரிவுகளாக பிரித்து நகராட்சியே பணிகளை செய்ய முடிவு செய்துள்ளது” என்றார்.