4 நாட்களாக நடந்த சோதனை முடிந்தது: கோகுலம் நிதி நிறுவனம் ரூ. 1,100 கோடி வரி ஏய்ப்பு? - வருமான வரி அதிகாரிகள் தீவிர விசாரணை

4 நாட்களாக நடந்த சோதனை முடிந்தது: கோகுலம் நிதி நிறுவனம் ரூ. 1,100 கோடி வரி ஏய்ப்பு? - வருமான வரி அதிகாரிகள் தீவிர விசாரணை
Updated on
1 min read

கோகுலம் நிதி நிறுவனத்தில் 4 நாட்களாக நடந்துவந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது. இந்நிறுவனம் ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை மயிலாப்பூரில் 1968-ம் ஆண்டு கோபாலன் என்பவர் கோகுலம் நிதி நிறுவனத்தை தொடங்கினார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி என 4 மாநிலங்களில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. கோகுலம் நிதி நிறுவன அலுவலகங்களில் கடந்த 19-ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 4 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த நவம்பர் மாதம் 1000, 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டன. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பலர் பதுக்கி வைத்திருந்த ரூ.12,500 கோடி கறுப்புப் பணத்தை தவறான வழிகளின் மூலம் வங்கிகளில் மாற்றியுள்ளனர். இதற்கு பல நிதி நிறுவனங்கள் உதவி செய்துள்ளன. கோகுலம் நிதி நிறுவனமும் பணத்தை மாற்றிக் கொடுத்ததாக சந்தேகம் இருக்கிறது. மேலும், வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் புகார்கள் வந்தன. இதன்பேரிலேயே சோதனை நடத்தப் பட்டது.

கேரளாவைச் சேர்ந்த ஒரு தனியார் வங்கியில் இருந்து ரூ.3 ஆயிரம் கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கோகுலம் சிட்பண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இது தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பணம் என்று கோகுலம் நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கோகுலம் நிதி நிறுவனங்களில் 4 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான பணப் பரிமாற்ற ஆவணங்கள் சிக்கின. ஹவாலா பணப் பரிமாற்றம் குறித்த ஆவணங்களும் சிக்கியுள்ளன. ரூ.1,100 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நிறுவன நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, வரி ஏய்ப்பு தொகையை செலுத்துவதற்கு கோகுலம் நிறுவனம் தயாராக இருப்பதுபோல தெரிவித்துள்ளனர்.

மொத்தம் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in