

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர் தலில், வேட்புமனு தாக்கல் செய் வதற்கான முதல் நாளில் தேமுதிக வேட்பாளர் உட்பட 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அதை முன்னிட்டு, தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. முதல் வேட்பாளராக, மந்தைவெளிபாக்கத்தை சேர்ந்த காமராஜர் தேசியகாங்கிரஸ் நிறுவ னர் எம்.எஸ்.ராஜேந்திரன், சுயேச் சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவரைத் தொடர்ந்து, தருமபுரி யைச் சேர்ந்த அக்னி ராமச்சந் திரன் வேட்புமனுவை தாக்கல் செய் தார். அவர் டெபாசிட் செலுத்த, தான் வைத்திருந்த ஏடிஎம் கார்டை கொடுத்தார். இதனை ஏற்க மறுத்த தேர்தல் அதிகாரிகள், பணமாக வோ, வரைவோலையாகவோ தான் டெபாசிட் தொகையை செலுத் தவேண்டும் என்றனர். அதற்கு அவர், “பிரதமர் மோடி, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தலில், டிஜிட்டல் முறையில்தான் டெபாசிட் தொகையை பெறவேண்டும்” என்று வாதிட்டார். பின்னர் தேர்தல் அதி காரிகள் அவரைச் சமாதானப்படுத்தி டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரத்தை பணமாக பெற்றனர்.
178-வது முறையாக போட்டி
பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரை எதிர்த்து பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்ட மேட்டூரைச் சேர்ந்த கே.பத்மராஜன், 178-வது முறை யாக ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து, தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் போலையா சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
நேற்று இறுதியாக தேமுதிக வேட்பாளர் ப.மதிவாணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் கட்சியின் மாநில இளைஞரணி செயலர் சுதீஷ், முன்னாள் எம்எல்ஏக்கள் பார்த்தசாரதி, நல்ல தம்பி உள்ளிட்டோர் வந்திருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த மதிவாணன், “இந்த தேர்தலில் கட்சியின் தலைவர் விஜயகாந்த், முதல் நபராக வேட்பாளரை அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன். ஆர்.கே.நகரை தூய்மை பகுதி யாக மாற்றுவேன்” என்றார்.