

ஓ.பன்னீர்செல்வத்துடன் முதலில் இணைந்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டிக்கு அவரது சொந்த ஊரில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர். கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த இவர், அந்த ஊராட்சியில் 1996-ம் ஆண்டு முதல் 3 முறை தலைவர் பொறுப்பில் இருந்துள்ளார். 2011, 2016 தேர்தல்களில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த முதல் சட்டப்பேரவை உறுப்பினரான ஆறுக்குட்டி, தனது ஜமாப் இசையால் ஜெயலலிதாவை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னீர்செல்வத்துடன் இணைந்த பிறகு, அவர் எப்போது ஊருக்கு வருவார் என்று அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், அவர் நேற்று விளாங்குறிச்சிக்கு வந்தார். அவருக்கு அதிமுகவினர் மட்டுமின்றி, ஊர் மக்களும் பலத்த வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், சால்வைகள், மாலைகள் அணிவித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: சட்டப்பேரவை உறுப் பினர்கள் கூட்டத்தில் முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தையே தனியாக உட்கார வைத்தார் சசிகலா. கட்சிப் பிரமுகர் ஒருவர் ஓ.பன்னீர்செல்வத்தை ‘ஜோக்கர்’ என்று கிண்டல் செய்தார். ஒரு முதல் அமைச்சருக்கே இந்த நிலையை உருவாக்கும் இடத்தில் நான் இருக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். மேலும், எனக்கு வாக்களித்த மக்களின் முடிவும் இதுதான். எனக்கு ஆயிரக்கணக்கில் வந்த செல்போன் அழைப்புகளும், வாழ்த்துகளும் அதை உறுதிப்படுத்தியது.
நாளை என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியாது. எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. மாவட்டச் செயலாளர் பதவி தருகிறோம், கோடிக்கணக்கில் பணம் தருகிறோம் என்றெல்லாம் கூறினார்கள். எனக்கு எதுவுமே வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். அப்போதும் அவர்கள் விடவில்லை. வெறும் 6 பேர் தான் ஓபிஎஸ் உடன் இருக்கின்றீர்கள். என்ன செய்துவிட முடியும்? என்றும் கேட்டனர். எனக்கு எதுவும் வேண்டாம். சசிகலா முதல்வர் இருக்கையில் அமர்ந்தால், உடனடியாக நான் ராஜினாமா செய்துவிடுவேன் என்றேன். ஒரு சிங்கம் அமர்ந்த இடத்தில் இவர்கள் அமரலாமா?
இவர்கள் முதல்வர் பொறுப்பு வகிக்காவிட்டால், தினகரன் அந்தப் பதவியை ஏற்பாராம். அதுவும் இல்லையென்றால் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமாம். இது என்ன நியாயம்? இதற்காகவா கட்சித் தொண்டர்கள் காலம்காலமாக சிரமப்பட்டனர்? தற்போது ஓ.பன்னீர்செல் வத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இப்போதுதான் மேட்டுப் பாளையம் ஓ.கே.சின்னராஜ் இணைந்துள்ளார். அடுத்து எங்கள் மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ.க் களும் வந்துவிடுவார்கள்.
எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்ய நாங்கள் என்ன பைத்தியக்காரர்களா? அவரை ஜெயலலிதா முதல்வராக அறிமுகப்படுத்தினார்? ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும்தான் 2 முறை முதல்வராக்கினார். எனவே, ஓ.பன்னீர்செல்வத்தைத் தவிர, வேறு யாரையும் முதல்வராக்க நான் உடன்படமாட்டேன்.
எனக்கு அமைச்சர் பதவி, மாவட்டச் செயலர் பதவி கிடைக்கும் என ஓ.பன்னீர்செல்வத்துடன் இணையவில்லை. மக்கள் விருப்பம்தான் முக்கியம் என்றார்.