

சென்னை மெரினா சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றக் கோரி டிராபிக் ராமசாமி நடுரோட்டில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்தார். பேனர்களை அகற்றும் வரை, ரோட்டிலேயே அவர் படுத்துக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்ற உத்தரவை மீறி சென்னையில் போயஸ் கார்டன், கதீட்ரல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார். போயஸ் கார்டன் பகுதியில் முதல்வர் வீடு அருகே கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் செய்தார். இதைத்தொடர்ந்து அங்குள்ள பேனர்களை போலீஸார் அகற்றினர்.
இந்நிலையில், மெரினா கடற்கரை சாலையில் காந்தி சிலை மற்றும் டிஜிபி அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு டிராபிக் ராமசாமி சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் வந்தார். திடீரென நடுரோட்டில் படுத்துக்கொண்டார்.
பிடிவாதம்
வாகனங்கள் செல்லும் நேரம் என்பதால் போலீஸார் பரபரப்பாகினர். அவரை எழுந்து செல்லுமாறு கூறினர். கடற்கரை சாலையில் வைத்துள்ள பேனர்களை அகற்றினால்தான் போவேன் என டிராபிக் ராமசாமி கூறினார். ‘நீங்கள் எழுந்து செல்லுங்கள். நாங்கள் பேனர்களை எடுக்கச் சொல்கிறோம்’ என போலீஸார் கூறினர். ‘நீங்கள் எடுத்த பிறகுதான் போவேன்’ என்று விடாப்பிடியாக கூறிய டிராபிக் ராமசாமி, சாலையிலேயே மீண்டும் படுத்துவிட்டார்.
எல்லா பக்கமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சிக்னலில் வாகனங்கள் தேங்கத் தொடங்கின. வேறு வழியின்றி, உடனடியாக ஆட்களை வைத்து பேனர்களை போலீஸார் அகற்றினர். பிறகு, மறியலைக் கைவிட்டு டிராபிக் ராமசாமி எழுந்து சென்றார்.