

தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட வீரப்பன் கூட்டாளிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பையொட்டி ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூவர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தண்டனை குறைப்பு நடவடிக்கையை மீண்டும் மேற்கொண்டு தமிழகச் சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வாடும் ஆயுள் சிறைவாசிகளை விடுவிப்பதற்கு தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
விசாரணைக் கைதிகளை நீண்ட நாட்களுக்கு சிறையில் வைத்திருக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மீறி 5 ஆண்டுகளுக்கும் அதிகமாக நூற்றுக்கணக்கான விசாரணைக் கைதிகள் தமிழகச் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே அவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்.
வீரப்பன் கூட்டாளிகள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்களின் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பல நாட்களாகிவிட்டன. தற்போது தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கையைப் பின்பற்றி அவர்களை விடுதலை செய்ய கர்நாடக முதல்வர் முன்வரவேண்டும் எனவும், இது குறித்து தமிழக முதல்வர் உரிய வகையில் கர்நாடக முதல்வரை வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.