

நிலுவையில் இருக்கும் போக்கு வரத்து ஊழியர்களின் கோரிக்கை கள் குறித்து முடிவெடுக்க துணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூன் 1-ம் தேதி போக்கு வரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் முன்னிலையில் ஊதிய உயர்வு குறித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பலன்கள், தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி ஆகியவற்றை வழங்கக்கோரி தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அமைச்சர்கள் செங்கோட்டையன், பி.தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரைக் கொண்ட குழுவுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் கடந்த 16-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக ரூ.1,000 கோடி, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.250 கோடி என மொத்தம் ரூ.1,250 கோடியை 3 மாதங்களில் வழங்க தமிழக அரசு ஒப்புக்கொண்டதால், வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
இதற்கிடையே, அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே, நிதித்துறை துணைச் செயலாளர் என்.வெங்கடேஷ் மற்றும் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உட்பட 48 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் இறுதியில் ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்களில் நிறைவேற்றாத 32 கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜூன் 1-ம் தேதி போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் ஊதிய உயர்வு குறித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தம் குறித்த 7-ம் கட்டப் பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது.