

தமிழகத்திலிருந்து அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற பக்தர்கள் பாதுகாப்பாக திரும்ப தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நம் நாட்டின் எல்லைப் பகுதியிலும், ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர் பகுதிகளில் தீவிரவாதமும், பிரிவினைவாதமும் தலைதூக்கியிருப்பதால் தொடர்ந்து அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து அமர்நாத் யாத்திரைக்கு 35 பேர் சென்றனர். அவர்கள் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பும் வழியில் ஸ்ரீநகரில் சிக்கி தவித்து வருகின்றனர்.
மேலும், பலர் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் பேருந்து நிலையம் போன்ற இடங்களில் தங்கி வருகின்றனர். அப்பகுதியில் போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தால் அவர்கள் தமிழகம் திரும்புவதில் காலதாமதம் ஆகிறது.
எனவே, தமிழக அரசு காஷ்மீர் மாநில அரசை உடனடியாக தொடர்பு கொண்டு, அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வலியுறுத்த வேண்டும். மேலும், அவர்கள் பாதுகாப்புடன், தமிழகம் திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.