Published : 07 Jan 2014 09:30 AM
Last Updated : 07 Jan 2014 09:30 AM

திருவாரூர் தங்கராசு மறைவு: கருணாநிதி, வைகோ, ராமதாஸ் இரங்கல்

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான திருவாரூர் தங்கராசு மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தி:

பெரியாரின் பேரன்பும், பெரும் பற்றும் கொண்டவரும், திராவிட இயக்க லட்சியங்களில் தன்னுடைய இறுதிநாள் வரை தளராத பிடிப்பு கொண்டவரும், நடிகர் எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் திரைப்படத்தின் மூலம் தமிழகமெங்கும் பெரிதும் அறியப்பட்டவரும், சுயமரியாதை சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு பல நாடகங்களையும், கதைகளையும் எழுதிய படைப்பாளியும்,

என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பும், மரியாதையும் காட்டியவருமான திருவாரூர் தங்கராசு மறைவு செய்தியை அறிந்து பெரிதும் துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

பெரியாரின் அடிச்சுவட்டில் காலூன்றி நின்று அரும்பணி ஆற்றிய மாமனிதர் தங்கராசு. தனது பகுத்தறிவு வார ஏட்டின் மூலம் மதம், இதிகாசம்,

சாதி மத ஒழிப்பு போன்ற கொள்கைகளை எழுதிவந்தார். அவர் தன்னலமற்ற பணிபுரிந்து அதிகார பீடங்களில் அமராமலே பணியாற்றி, திராவிட இயக்க வரலாற்றில் தனியொரு இடம் பெற்றார். தங்கராசுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கொள்கை வழித் தோழர்களுக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்:

தமிழ்நாட்டில் திராவிட கழகத்தை வளர்த்தெடுப்பதில் பெரியாருக்கு தோள் கொடுத்தவர். பகுத்தறிவுக் கருத்துகளை பரப்புவதில் பெரியார் வேர் என்றால் திருவாரூர் தங்கராசு மரமாக விளங்கினார். அவர் எழுதிய ரத்தக் கண்ணீர் திரைப்பட வசனங்கள் மூட நம்பிக்கையாளர்களையும் விழித்தெழச் செய்யும் திறன் கொண்டவை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x