தேனி மாவட்டத்தில் இருந்து திசு வாழைகள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி: கிலோ ரூ.28-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டத்தில் இருந்து திசு வாழைகள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி: கிலோ ரூ.28-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
Updated on
2 min read

தேனி மாவட்டத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு திசு வாழைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை கிலோ ரூ.28-க்கு விற்பனையாவதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் செவ்வாழை, பூவம், நேந்திரம், திசு வாழை எனப் பல்வேறு வாழைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் பச்சை வாழை என்று அழைக்கப்படும் திசு வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் திசு வாழைகள் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங் கள் தவிர ஈரான், ஈராக், சவுதி என வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப் படுகிறது.

கடந்த 2014-15-ம் ஆண்டுகளில் திசு வாழை கிலோ ரூ.4-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாழை நடவுக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் பல விவசாயிகள் திசு வாழை சாகுபடியை நிறுத்திவிட்டு மாற்று விவசாயத்திற்கு மாறினர்.

இந் நிலையில், வளைகுடா நாடு களில் திசு வாழை கிலோ ரூ.28-க்கு தற்போது விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளும், வியா பாரிகளும் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். இது குறித்து பூமலைக்குண்டு வாழை விவசாயியும், ஏற்றுமதி யாளருமான எஸ்.பன்னீர்செல்வம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

திசு வாழையை விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்து அவற்றை கண்டெய்னரில் ஏற்றி கப்பல் மூலம் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறோம். தேனி மாவட்டத்தில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 300 டன் திசு வாழை ஏற்றுமதி செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சி, வறட்சி காரணமாக நடப்பாண்டில் விவசாயிகள் திசு வாழை சாகுபடியை குறைந்து விட்டனர். இதனால் 7 ஆயிரம் ஹெக்டேர் வரை நடைபெற்ற திசு வாழை சாகுபடி இந்த ஆண்டு 4,200 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஒரு வாழைத்தாரில் சுமார் 25 கிலோ வரை காய்கள் இருக்கும். இவற்றை உற்பத்தி செய்ய விவசாயிக்கு ரூ.120 வரை செலவு ஆகும். அவர்களிடம் கிலோ ரூ.21 என கொள்முதல் செய்து நாங்கள் அவற்றை வளைகுடா நாடுகளில் ரூ.28 என விற்பனை செய்கிறோம்.

விவசாயிகளின் தோட்டத்திற்கு நேரில் சென்று காய்களை வெட்டி அவற்றை வாகனங்களில் ஏற்றி வரவேண்டும். பின்னர் கிடங்குகளில் சேர்த்து தரமற்ற காய்களை நீக்கிவிட்டு பாதுகாப்பான முறையில் அவற்றை பெட்டியில் அடைத்து கப்பலில் ஏற்றும் வரை அனைத்து செலவுகளையும் ஏற்றுமதியாளர் (வியாபாரி) ஏற்றுக்கொள்கிறார்.

அனைத்து செலவுகளும்போக எங்களுக்கு ஒரு கிலோவிற்கு 50 பைசா முதல் ரூ.1 வரை லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு ஒரு ஏக்கருக்கு நிகர லாபமாக ரூ.5 லட்சம் வரை கிடைக்கும்.

தேனி மாவட்ட திசு வாழை சுவையின் தன்மை அதிகம். இதனால் வளைகுடா நாடுகளில் வரவேற்பு கிடைத்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வினால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு, ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டி வருகிறோம் என்றார்.

எஸ்.பன்னீர்செல்வம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in