

முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தனது பணிக்கு திரும்பும்வரை, அவரின் பொறுப்புக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டங்களுக்கும் ஓ.பி.எஸ். தலைமை வகிப்பார் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அலுவலகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 166, உட்பிரிவு 3-ன்படி, முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த துறைகள் அனைத்தும் நிதி, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒதுக்கப் பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டங்களுக்கு இனி நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகிப்பார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின்படி, அவர் மீண்டும் தனது பணிகளை கவனிக்கும் வரை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பதவியில் ஜெயலலிதாவே நீடிப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி இரவு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவ நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்ததால் பல்வேறு வதந்திகள் பரவின.
திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முதல்வரின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கடந்த 30-ம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். முதல்வர் குணமடைந்து வருவதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், லண்டன் சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தது. அதனைத் தொடர்ந்து, முதல்வருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும், அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதால் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்தது.
கடந்த 7-ம் தேதி, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் ஆகியோரை அழைத்து, முதல்வரின் உடல்நிலை மற்றும் தமிழக அரசின் நிர்வாகம் தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் தொடர்ந்து மருத்துவ மனையில் இருப்பதால், அவரின் பொறுப்புகளை கவனிக்க மாற்று ஏற்பாடுகள் தேவை என கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த உள்துறை, பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அன்று நாவலர்.. இன்று ஓபிஎஸ்
1984-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீண்ட நாட்கள் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்ற நிலை ஏற்பட்டதால், 25-10-1984 அன்று அப்போதைய தமிழக ஆளுநர் குரானா ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், ‘முதல்வர் எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர் உடல்நலம் பெற்று திரும்பும் வரை, அவரது இலாகாக்களை நிதியமைச்சர் நெடுஞ்செழியன் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார். இதன்படி, முதல்வர் எம்.ஜி.ஆர். வசம் உள்ள பொது நிர்வாகம் (சட்டம், ஒழுங்கு), மதுவிலக்கு, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் விவ காரம், திட்டம் ஆகிய இலாகாக் களை நிதியமைச்சர் நெடுஞ்செழி யன் கூடுதல் பொறுப்பாக சேர்த்து கவனிப்பார். அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் நிதியமைச்சர் நெடுஞ்செழியன் தலைமை தாங்குவார். முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நலம் பெற்று மீண்டும் தமது பணிகளை கவனிக்கும் வரை இந்த ஏற்பாடு நடைமுறையில் இருக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது.