

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் வசந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று நடந்த தொழில்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாத விவரம்:
எச்.வசந்தகுமார் (காங்கிரஸ்):
தாமிரபரணி-கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத்திட்டம் திமுக ஆட்சியில் ரூ.309 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் நடக்கவில்லை. மக்களின் நன்மைக்காக இத்திட் டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:
நான்கு பகுதிகளாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதல் இரண்டு பகுதிகளில் 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. இத்திட்டத்தில் மீதமுள்ள பணிகளை முடிக்க மறு மதிப்பீடு செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் மீதமுள்ள 3, 4-ம் பகுதிகளில் பணிகள் தொடங்கப் படும்.
எச்.வசந்தகுமார்:
மழையால் பாதிக்கப்பட்ட சிறு, குறு நிறுவனங்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
ஊரக தொழில்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி:
மழை யால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்து 560 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.1,500 கோடி நிவாரண உதவி வழங்கப் பட்டுள்ளது.
எச்.வசந்தகுமார்:
நாங்குநேரி பகுதியில் 2008-ம் ஆண்டு தொழில் பூங்கா தொடங்கப்பட்டது. இதற் காக ரூ.18 ஆயிரம் மதிப்பில் 2500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டது. இதன் மூலம் அந்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என நம்பப் பட்டது. தற்போது அந்த நிலம் வேறு நோக்கத்துக்கு பயன் படுத்தப்படுவதாக தெரிகிறது. தொழில்கள் தொடங்கப்பட்டு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும்.
அமைச்சர் சம்பத்:
நாங்குனேரியில் 1300 ஏக்கர் நிலம் மட்டுமே எடுக்கப்பட்டது. தற்போது இங்கு தொழில் தொடங்க அனுமதியளிக்கப்பட்ட 28 நிறுவனங்களில் 10 நிறு வனங்களால் தொழில் தொடங்கப் பட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எச்.வசந்தகுமார்:
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடைகளை நீக்க வேண்டும்.
அமைச்சர் சம்பத்:
ஏற்கனவே மாவட்டங்களில் உள்ள சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு மண்பாண்டத் தொழிலாளர்கள் மண் எடுக்க அனுமதியளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
எச்.வசந்தகுமார்:
தற்போதும் மண் எடுக்க அனுமதிக்கப்பட வில்லை.
அமைச்சர் சம்பத்:
அவர்கள் 200 கன அடிவரை எடுத்துக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எச்.வசந்தகுமார்:
செங்கல் சூளைக்காக விவசாய நிலங் களில் மண் எடுக்க அனுமதிக்கப் படுகிறது.
மின்துறை அமைச்சர் தங்கமணி:
மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற்றிருந்தால் பட்டா நிலத்தில் மண் எடுக்க அனு மதிக்கப்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.