மூட்டு வலியால் அவதியுறும் பேரறிவாளனுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

மூட்டு வலியால் அவதியுறும் பேரறிவாளனுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு
Updated on
1 min read

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருவதால், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக வேலூர் சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சிறுநீரக தொற்று நோய் மற்றும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். மாதம் ஒருமுறை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை பேரறிவாளனை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் மருத்துவப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிறுநீரக தொற்று நோய்க்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பேரறிவாளன், பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷா சதாசிவத்தை சந்தித்து, கடந்த சில மாதங்களாக மூட்டு வலியால் சிரமப்படுவதாக கூறி உள்ளார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய, வேலூர் சிறைத்துறை அதிகாரிகளுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பரிந்துரை செய்தார். இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சென்னை அரசு பொது மருத்துவமனையில் பேரறி வாளனுக்கு மூட்டு வலி சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்த பிறகு சென்னையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in