Published : 11 Jan 2014 10:00 AM
Last Updated : 11 Jan 2014 10:00 AM

சென்னையில் 36.36 லட்சம் வாக்காளர்கள்- புதிதாக 2.32 லட்சம் பேர் சேர்ப்பு

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை 36 லட்சத்து 36 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளது என மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 2014–ம் ஆண்டுக்கான வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்த இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான பட்டியலை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான விக்ரம் கபூர் வெளியிட்டார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு கடந்த அக்டோபர் 1 முதல் 31-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்க்க 2 லட்சத்து 49 ஆயிரத்து 777 படிவங்களும், நீக்கம் செய்ய 3 ஆயிரத்து 414 படிவங்களும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. ஏற்பளிப்பு செய்யப்பட்ட படிவங்கள் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட 2014-ம்

ஆண்டுக்கான துணைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.இதில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் 2 லட்சத்து 32 ஆயிரத்து 199 பேர். பெயர் நீக்கம் கோரிய படிவங்கள் மற்றும் தகுதியின்மை அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர்கள் 45 ஆயிரத்து 735 பேர். சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகம், மாநகராட்சி மற்றும் உதவி ஆணையர் அலுவலகத்தில் துணைப் பட்டியல்களை பொதுமக்கள் பார்வையிடலாம்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி திருத்தப் பட்டியலின்படி சென்னை மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 36 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

12 தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் அதிகம்

சென்னை மாவட்டத்தில் ஆண்களைவிட பெண் வாக்காளர் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 12-ல் பெண் வாக் காளர்களே அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் 2014-ம்

ஆண்டுக்கான வாக்காளர் திருத்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 36 ஆயிரத்து 199. இதில் ஆண் வாக்காளர்கள் 18 லட்சத்து 13 ஆயிரத்து 76. பெண் வாக்காளர்கள் 18 லட்சத்து 22 ஆயிரத்து 461. ஆண்களைவிட பெண்கள் 9 ஆயிரத்து 385 பேர் அதிகம்.

துறைமுகம், விருகம்பாக்கம், தி.நகர், வேளச்சேரி ஆகிய 4 தொகுதிகளைத் தவிர மற்ற 12 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநங்கைகளின் எண்ணிக்கை 662. பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக் காளர்களில் 18 வயது பூர்த்தி யடைந்தவர்கள் எண்ணிக்கை 25,344.

சென்னையில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி வேளச்சேரி. இங்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 596 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி துறைமுகம். இதன் மொத்த வாக்காளர்கள் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 645 ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x