

திருச்சி மற்றும் புதுச்சேரியில் மாணவிகளை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பிச்சாண்டார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச் சந்திரன். இவர், திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் தலை மைக் காவலராக உள்ளார். இவரது மனைவி பாத்திமா, கன்டோன் மென்ட் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர். இவர்களது மகள் மோனிகா(21) திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(26) என்பவருக்கும் மோனிகாவுக்கும் பழக்கம் இருந்த தாகவும், பெற்றோர் அறிவுறுத் தலின்பேரில் பாலமுருகனுடனான பழக்கத்தை மோனிகா துறந்துவிட்ட தாகவும் கூறப்படுகிறது. ஆனால், பாலமுருகனோ, தன்னை காதலிக்குமாறு மோனிகாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், மோனிகா நேற்று கல்லூரி முடிந்து பிச்சாண்டார்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீடு நோக்கி நடந்து சென்றபோது, பாலமுருகன் அவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், மோனிகாவின் உடலில் 5-க்கும் அதிகமான இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. மோனிகா திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பாலமுருகனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அப்போது, தான் ஏற்கெனவே விஷம் அருந்தியுள்ளதாக பாலமுருகன் போலீஸாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, பாலமுருகன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புதுச்சேரி மாணவி
புதுச்சேரியை அடுத்த வில்லிய னூர் ஊசுட்டேரியில் வசிப்பவர் மரியஜோசப். இவரது மகள் ஹீனோ டோனிஸ்(19), ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்தார். அதே கல்லூரியில் எழிலரசன்(19) என்பவர் பி.காம் படித்து வருகிறார். பள்ளியில் படிக்கும்போதே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் எழிலரசனின் நட்பு ஹீனோ டோனிஸுக்கு பிடிக்காததால் பழக்கத்தை துண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து ஹீனோ டோனிஸ் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த எழிலரசன், தனது இருசக்கர வாகனத்தில் ஏறுமாறு அவரை வற்புறுத்தியுள்ளார். அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த எழிலரசன், கத்தியால் ஹீனோ டோனிஸை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து ஹீனோ அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வில்லியனுார் போலீஸார் வழக்கு பதிவு செய்து, எழிலரசனை தேடி வருகின்றனர்.