

சென்னை திருமங்கலம் என்.வி.என். நகர் மாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் திருவிழா நடந்தது. பாதுகாப்பை கருத்தில்கொண்டு பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி கோயில் நிர்வாகத்தினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் திருவிழாவில் கலந்து கொண்ட செல்லம் என்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற பெண்ணின் உருவம் கண் காணிப்பு கேமராவில் பதிவானது. மேலும், கூட்டத்தில் சந்தேகப்படும் வகையில் அதிகளவில் கவரிங் நகைகளை அணிந்து கொண்டு 5 பெண்கள் சுற்றித் திரிவதை கோயில் நிர்வாகிகள் கவனித்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த திருமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் 5 பெண்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் களை திருமங்கலம் காவல் நிலை யம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் 5 பேரும் திருச்சி மாவட்டம் சமய புரம் பகுதியை சேர்ந்த முத்து லெட்சுமி(48), மீனா(23), சந்தி ரா(36), ப்ரியா(23), முத்து(48) என்பது தெரியவந்தது.
5 பெண்களும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களின் கவனத்தை திசைத் திருப்பி, தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. திருமங்கலம் போலீஸார் 5 பெண்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.