புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மின்தடையால் 3 நோயாளிகள் உயிரிழப்பு: உறவினர்கள் ஆவேசம்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மின்தடையால் 3 நோயாளிகள் உயிரிழப்பு: உறவினர்கள் ஆவேசம்
Updated on
1 min read

மருத்துவர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின்போது திடீரென ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் 3 பேர் உயிரிழந்தனர்.

புதுச்சேரி கதிர்காமம் வழுதாவூர் சாலையில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையின் டயாலிசிஸ் பிரிவில் முத்தரையர்பாளையம் காந்தி திருநல்லூரைச் சேர்ந்த தனியார் நிறுவன பணியாளர் கணேசன் (54), கதிர்காமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் மனைவி சுசீலா(75), வீமன் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி அம்சா(55) ஆகியோருக்கு நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது, திடீரென மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. டயாலிசிஸ் கருவிகளின் மின்கலனும் சரியாக செயல்படவில்லை. மேலும், மருத்துவமனையில் இருந்த ஒரே ஒரு ஜெனரேட்டரும் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட மின்தடையால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த கணேசன், சுசீலா, அம்சா ஆகிய 3 பேரின் உடல்நிலை மோசமானது. இதனையடுத்து அவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப் பட்டது. ஆனால் 3 பேரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தனர்.

உறவினர்கள் ஆத்திரம்

இந்த தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவில் இருந்த பொருட்கள், கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்த எஸ்பி ரச்சனா சிங் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்தவர்களின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தகவல் அறிந்த புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அரசு கொறடா அனந்தராமன், சுகாதாரத் துறை இயக்குநர் ராமன் ஆகியோர் மருத்துவ மனைக்கு வந்தனர். மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவை பார்வையிட்டு, இறந்த வர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், “மின்சாரம் தடைபட்ட காரணத்தால் 3 பேர் உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது. சம்பவம் நடந்தபோது டயாலிசிஸ் பிரிவில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் என மொத்தம் 6 பேர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். நோயாளிகளின் உயிரிழப்புக்கான முழு காரணத்தை கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப் படும்’’ என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனையின் பொது மருத்துவ உதவி பேராசிரியர் தீரஜ் ஜெயின், தலைமை செவிலியர் சண்முகபிரியா, செவிலியர் பிரவீணா மற்றும் 3 பயிற்சி செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in