Published : 15 Mar 2017 08:18 AM
Last Updated : 15 Mar 2017 08:18 AM

பிரதமர் மோடியின் படத்தை அவமதித்து போராட்டம்: சென்னையில் 120 பேர் கைது

சென்னையில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களின் உருவப் படங்களை அவமதித்து போராட்டம் நடத்திய 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாமல் உள்ளது. இதுமட்டுமின்றி, தமிழக நதிகளின் நீர் வரத்தை குறைக்கும் வகையில், தடுப்பணைகள் கட்ட ஆந்திரா, கேரளா, கர்நாடகா அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இவற்றைக் கண்டித்து பாஜக அலுவலகத்தை இழுத்து மூடப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் திராவிடர் விடுதலை கழகம், மே 17 இயக்கம், தமிழக மக்கள் முன்னணி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை, தமிழர் விடியல் கட்சி, அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 120 பேர் நேற்று காலை 11 மணி அளவில் சென்னை தியாகராயா சாலையில் சின்டிகேட் வங்கி அருகே ஒன்று கூடினர். பாஜக அலுவலகத்தை இழுத்து மூடுவதற்காக சென்றனர்.

பாஜக கொடியையும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் சுப்பிரமணியன் சுவாமி, தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் எம்.பி., எச்.ராஜா ஆகியோரின் உருவப் படங்களை அவமதித்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்தனர். தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x