Published : 06 Feb 2017 11:13 AM
Last Updated : 06 Feb 2017 11:13 AM

விவாதக் களம்: தமிழகம் இனி..?

தமிழகத்தில் கடந்த 2016-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, தமிழக முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, ஜெயலலிதா கவனித்து வந்த உள்துறை உள்ளிட்ட துறைகள் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா காலமானார். இதையடுத்து, அன்று இரவே முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருடன் ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இதைத் தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது பொதுச்செயலாளராக சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே முன்மொழிந்தார். அதன்பின் டிசம்பர் 29-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில், சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் டிசம்பர் 31-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கிடையே கட்சி, ஆட்சி நிர்வாகங்கள் இரண்டும் ஒருவரிடமே இருக்க வேண்டும். அதனால், முதல்வர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகிகளும் அமைச்சர்களும் வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தனர். ஆனால், சசிகலா தொடர்ந்து அமைதி காத்து வந்தார். பொங்கலுக்கு முன்னதாக அவர் முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாயின. ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமானதால் அந்த முயற்சி தள்ளிப்போனது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். வரும் 9-ம் தேதி ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 21-வது முதல்வராக சசிகலா பதவியேற்கிறார். இதன் தொடர்ச்சியாக...

தமிழக முதல்வராக பதவியேற்கப் போகிறவர் முன்னே உள்ள சவால்கள், தமிழக அரசின் செயல்பாடுகள், தமிழக அரசியல் சூழல், தமிழக மக்களின் நிலை இனி எப்படிப்பட்டதாக இருக்கும்?

உங்கள் கருத்துகளை கீழேயுள்ள கருத்துப் பகுதியில் பதிந்து விவாதிப்போம் வாருங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x