

வங்கக் கடலில் நிலவிய காற் றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்ட நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் தமிழகத்தின் தெற்கு கடலோரப் பகுதி இடையே நிலவி வந்தது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று வலுவிழந்துவிட்டது.
மழையை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெயில் அளவின்படி, அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 105.26 டிகிரி ஃபாரன்ஹீட், திருச்சியில் 104.18, கரூர் பரமத்தியில் 103.1, திருத்தணியில் 101.84, சேலத்தில் 100.4, வேலூர் மற்றும் தொண்டியில் தலா 100.04, சென்னையில் 99.32 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.