

இரண்டு நாட்களுக்கு முன்பு பாரதப் பிரதமர், பல்வேறு துறைகளின் செயலாளர்களுடன் அதிகாரபூர்வமற்ற ஒரு சந்திப்பு நிகழ்த்தி உள்ளார். மக்களின் தேவைக்கு ஏற்ப, அரசு அலுவலகங்களில் சாமானியர்களின் பணிகள் எளிதில் நிறைவேறுகிற வகையில் கடமை ஆற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார். இதே போன்றதொரு கூட்டத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, பிரதமர் விடுத்த ஒரு வேண்டுகோள் இப்போது நினைவில் கொள்ளத்தக்கது. அது என்ன....?
இது - கல்விச் சேர்க்கைக் காலம். தாம் விரும்பும் பள்ளி, கல்லூரியில், தாம் விரும்பும் படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு, பெற்றோர்களும் இளைஞர்களும் தீவிரமாக சுழன்று கொண்டு இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் சந்திக்கும் முக்கியப் பிரச்சினை - சான்றிதழ் நகல்களுக்கு சான்றொப்பம் (attestation) பெறுவது.
அனேகமாக எல்லாக் கல்வி நிறுவனங்களுமே, விண்ணப்பத்துடன், பல்வேறு சான்றிதழ்களின் நகல்களை இணைக்கச் சொல்லி வற்புறுத்துகின்றன. இந்த நகல்கள், ஏதேனும் ஓர் அரசு அலுவலரின் (Gazetted Officer) சான்றொப்பம் இடப்பட்டு இருக்க வேண்டும். இது ஒரு கட்டாய நடைமுறையாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிபந்தனை, மிகப் பெரிய அழுத்தத்தை, இளைஞர்கள், அவர்களின் பெற்றோர்கள் மீது சுமத்துகிறது. அதிலும் கிராமப்புறங்களில் இருப்போர் மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்.
சாதாரணமாக, அரசு அலுவலர்கள் யாருடனும் பழகுகிற சந்தர்ப்பம் இவர்களுக்கு அமைவதில்லை. யார் யாரெல்லாம் சான்றொப்பம் இடும் அதிகாரம் கொண்ட அலுவலர்கள் என்கிற விவரம் கூடப் பலருக்குத் தெரிவது இல்லை. இந்த நிலையில், கல்விச் சான்றிதழ் நகல்களுக்கு சான்றொப்பம் பெற, கிராமத்துப் பெற்றோர்கள் படுகிற பாடு சொல்லி மாளாது. இந்த இன்னலில் இருந்து இவர்களை விடுவிக்க வேண்டியது அவசர அவசியம் ஆகும்.
இது தொடர்பாக மிகச் சரியானதொரு அறிவிப்பை, கடந்த 2014-ல், இந்தியப் பிரதமர் வெளியிட்டு இருந்தார். ‘சான்றிதழ் மற்றும் உறுதி மொழிப் பத்திரங்களில் (affidavits) சான்றொப்பம் கோருகிற வழக்கத்தை விட்டுவிட வேண்டும்; சுய சான்றொப்பம் (self attestation) இட்டாலே போதும்’ என்றும் பிரதமர் அறிவித்தார். இதன் மீது, 2014 ஆகஸ்ட் 2-ம் தேதி, பிரதமர் அலுவலகம், முறையான அறிவிப்பையும் வெளியிட்டது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம்
சுய சான்றொப்பத்தில் யாரும் வேண்டுமென்றே தவறான தகவல் அளித்து இருந்தால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (ஐ.பி.சி.)யின் கீழ் நடவடிக்கை எடுக்க வழி இருக்கிறது என்பதையும் அது சுட்டிக் காட்டியது. இதனைத் தொடர்ந்து, நிர்வாகச் சீர்திருத்தத் துறை, அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்கள், அனைத்துத் துறை செயலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியது.
சான்றொப்பம் பெறுவதற்கு, சாமானியக் குடிமக்கள் பணமும் நேரமும் செலவிட வேண்டி இருக்கிறது; இது கூடாது. ஆகவே, சுய சான்றொப்பம் இட்ட படிவங்களே போதுமானது என்று அறிவுறுத்தி, இதனையே அனைத்து மட்டங்களிலும் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டது. (‘தி இந்து’ - 1 ஆகஸ்ட் 2014) அரசு அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், படிவங்களுக்கு மட்டுமே பொருந்துவது போலத்தான் மேற்கூறிய அறிவிப்பும் கடிதப் போக்குவரத்தும் அமைந்து இருக்கின்றன. ஆனாலும், அது சொல்கிற ‘செய்தி’, மிகத் தெளிவானது.
சாமானியர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதே தவறான அணுகுமுறை. சுய சான்றொப்பம், இந்தக் குறையை அறவே போக்குகிறது. மேலும், நிர்வாக சீர்திருத்தத் துறையே சுட்டிக்காட்டி இருப்பது போல, ஒரு சான்றொப்பம் பெற, நூறு ரூபாயில் இருந்து ஐநூறு ரூபாய் வரை செலவிட வேண்டி இருக்கிறது. வறியவர்களுக்கு இது, மிகப் பெரிய தொகை. இந்தச் சுமையில் இருந்து அவர்களை விடுவித்தாக வேண்டும்.
வேடிக்கை என்னவென்றால், அதற்கான அதிகாரம் இல்லாமலேயே சான்றொப்பம் இடுகிற அலுவலர்கள் உண்டு. அறியாமைதான்; வேறு எந்த உள் நோக்கமும் இல்லை.
ஏற்கனவே பிரதமராலும், நிர்வாக சீர்திருத்தத் துறையாலும் அறிவுறுத்தப்பட்டுள்ளபடி, கல்விச் சான்றிதழ்களின் நகல்களுக்கு சுய சான்றொப்பம் இட்டாலே போதும் என்கிற வழிமுறை கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
அரசின் அறிவிப்பில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தனியார் நிறுவனங்களும், சான் றொப்பம் கேட்டுத் துன்புறுத்துவதை நிறுத்திக் கொள்ளலாம். எப்படியும், சேர்க்கைக்கு முன்பாக, மூலச் சான்றிதழ்கள் (original certificates) சமர்ப்பிக்கப் படத்தான் போகின் றன. அது சமயம் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டாலே போதுமே...!
அறிவியல் தொழில் நுட்பம் வெகுவேகமான வளர்ச்சி கண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும், எந்த விவரத்தையும் உடனுக்குடன் கேட்டுப் பெறுகிற வசதிகள் வந்துவிட்டன. அப்படி இருக்க, சென்ற நூற்றாண்டுப் பழக்கம் இன்னமும் தொடரத்தான் வேண்டுமா...?
சுய சான்றொப்பம் - நிறுவனங்கள் எடுக்க வேண்டிய மிகச் சிறிய முடிவு; இதனால், இளைஞர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகப் பெரிய நிவாரணம்.
ஏன் செயல்படுத்தக் கூடாது....?